இந்தியாவுக்கும் – சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளதாகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை விரைவாக முன்வைக்கவேண்டும் என இந்தியா சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் எதனையும் தரவில்லை எனவும் சிறிலங்கா அரசு நேற்று (13) தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவாக உள்ளன. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு விரைவாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியா எமக்கு தெரிவிக்கவில்லை.
நாம் எமது சுதந்திரமான கொள்கைகளையே பின்பற்றி வருகிறோம் எமக்கு யாரும் அழுத்தங்களை தரவில்லை. மகிந்தா ராஜபக்சா இந்தியாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் விஜயம் பெரும் வெற்றிபெற்றுள்ளது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தாவுடன் மேற்கொண்ட பேச்சுக்களின் போது 13 ஆவது திருத்தச்சட்டத்தின் நடைமுறை, அரசியல் தீர்வு, பொருளாதார ஒத்துழைப்புக்கள் போன்றன கலந்துரையாடப்பட்டன.
வடக்கு – கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மானிப்பதற்கு இந்தியா 250 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. விடுகள், பாடசாலைகள், பொது நிர்வாக சேவை கட்டிடங்கள், கலாச்சார மையங்கள், பயிற்சி நிலையங்கள், துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றை புனரைமைக்க இந்தியா முன்வந்துள்ளது.
பலாலி வான்படைத்தளம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ள இந்தியா, துறைமுகப் பணிகளை இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to இந்தியா எவ்வித அழுத்தமும் எமக்குத் தரவில்லை: பீரீஸ்