தமிழகத்தின் கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு வளாகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டிய குடும்பத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சேலம் அருகே உள்ள தாசநாய்க்கன்பட்டியில் சில வருடங்களுக்கு முன் சிறுவன் ஒருவனை வாலிபர் கடத்திச் சென்று மிரட்டினான்.
இதையடுத்து அந்த வாலிபரிடமிருந்து சிறுவனை காப்பாற்ற போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், குண்டு தவறுதலாக பாய்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சண்முகம் பலியானார்.
தனது மகன் இறந்து விட்டதால் மற்றொரு மகனுக்கு அரசு வேலை வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் கோவிந்தன் மனு கொடுத்தார். ஆனால், வேலை தராமல் இழுத்தடித்து வருவதால் கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சென்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திடீர் மிரட்டல் விடுத்தார் கோவிந்தனர்.
இதையடுத்து அவரை அதிகாரிகள் சந்தித்து சமாதானம் பேசினர். ஆனால், கோவிந்தன் பிடிவாதமாக உள்ளதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க தற்போது அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மாநாட்டையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நெருங்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மூன்று இடங்களில் ரயில் கவிழ்ப்பு முயற்சி நடந்துள்ளதால் ரயில் தண்டவாளங்களில் ரோந்து அதிகமாகியுள்ளது.
கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



0 Responses to செம்மொழி மாநாட்டின்போது தீக்குளிக்கப் போவதாக மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு!