அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் இருந்து இன்று மாலைக்குள் 500 சிங்களக் குடும்பங்கள் வந்து சேர உள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் ஏ.சந்திரசிறி.
மீளக்குடியேறும் நோக்கத்தோடு ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்து ரயில் நிலையத்தில் தற்காலிகமாகத் தங்கி உள்ள சிங்கள மக்களில் ஒருவரே சந்திரசிறி. அந்த மக்களின் சார்பில் ஊடகங்களிடம் இவரே பேசுகின்றார்.
மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும், தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரச அதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் மீளக்குடியேறும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வர உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீளக்குடியேறுவதற்காக தாமும் யாழ்ப்பாணம் வரப் போகின்றனர் என அந்த மக்கள் எமக்கு அறிவித்துள்ளனர். ஆனால், இங்கே எங்களுக்கு போதிய ஏற்பாடுகள் ஏதும் இல்லை.
ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையிலேயே இருக்கின்றோம். எமது மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். அரச அதிபர், ஜனாதிபதி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்ட போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அயலில் உள்ள தமிழ் மக்களே இப்போதைக்கு எமக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றார்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று சந்தித்துப் பேசுவார் என்றும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையத்தில் தங்கி உள்ள சிங்களக் குடும்பங்களின் விவரங்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் நேற்றுப் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, மீளக்குடியமரும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். செயலகத்தில் உள்ள உரிய அதிகாரிகளுக்கு மேலிட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றன