Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் ஆகையால் போர் முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மெல்ல மெல்ல தமிழர் தாயகங்களுக்கு வரத்தொடங்கினார்கள் ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகள் போல வந்தவர்கள் பின்பு தொழிலுக்காகவும் அதன் பின்பு தற்போது குடியிருப்பதற்காகவும் வரத்தொடங்கி விட்டார்கள்.

தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் எவ்வாறு இவர்கள் குடியிருக்க முடியும் என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை தமிழர் பகுதிகளில் வெற்று நிலங்களாக காணப்படுகின்ற நிலங்கள் எல்லாமே தற்போது தமிழர்களுக்கு சொந்தமானதாக இல்லை இந்த நிலங்களை தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் சிங்களவர்களுக்கு விற்கிறார்கள் இதுதான் உண்மை.

தமிழர் பகுதிகளில் வெற்று நிலங்களாக உள்ள காணிகளின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாகவும் வெளிநாடு மற்றும் இலங்கையின் தென்பகுதிகளில் (சிங்களவர்களுடன்) வசிப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள். இவர்களால்தான் இந்த காணிகள் சிங்களவர்களுக்கு கைமாறுகின்றது. இப்படிப்பட்ட தமிழர்களுக்கு தமிழர் தாயகம் அவர்களின் 10ர்வீக நிலம் என்பதைப் பற்றியோ இது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ ஏதும் தெரியாது சுருங்கச் சொன்னால் கடந்த வருடம் மே மாதம் நடந்த இன அழிப்பு யுத்தம் பற்றியே இவர்களுக்கு பெரிதாக தெரியாது.

அண்மைக் காலங்களில் வசதி படைத்த தமிழர்கள் தங்களின் காணிகளை விற்பனை செய்வதற்காக நாளேடுகளில் கவர்ச்சியான முறைகளில் விளம்பரம் செய்வதைக் காண்கிறோம் இவர்களின் நோக்கம் அதிக பணத்திற்கு தங்களின் காணியை விற்க வேண்டும் இதற்காக இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு விடயம் என்னவெனில் மீண்டும் ஒரு யுத்தம் தமிழர் பகுதிகளில் தொடங்கினால் தங்களின் இந்த நிலங்கள் யாருக்குமே விற்க முடியாமல் தங்களின் சொத்துக்கள் செல்லாக்காசி ஆகிவிடும் என்ற பயமும் இவர்களுக்கு இருக்கின்றது. இதனால்தான் அவசரமாக விற்பனை செய்ய நினைக்கிறார்கள்.

மேலும் விடுதலைப் புலிகள் தங்களின் நிருவாகங்களை நடாத்திய காலத்தில் அவர்களுடன் ஒத்துளைக்காமல் வெளிநாடு மற்றும் தென்பகுதிக்குச் சென்று வசித்த தமிழர்கள் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்றவுடன் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை யாருக்காவது விற்பனை செய்ய நினைக்கிறார்கள் இந்த வாய்ப்பை சிங்களவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அண்மையில் மட்டக்களப்பில் தமிழ் சட்டத்தரணியிடம் ஒரு தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர் வந்து மட்டக்களப்பில் தான் கொள்வனவு செய்த தனக்குச் சொந்தமான நான்கு காணிகளின் (அண்ணளவாக 10 ஏக்கர்) பாதுகாப்பிற்காக சட்ட ஆவணங்களைத் தயாரித்துச் சென்றாராம். அப்போது அந்த தமிழ் பற்றாளரான சட்டத்தரணி அசந்து போய் விட்டாராம்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் அனேகமான நிலங்களை சிங்களவர்கள் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு தாயகத்தில் விற்பனை செய்வதற்காக இருக்கின்ற எம்மவர்களின் நிலங்களை புலம்பெயர் தமிழர்கள் தமதாக்கிக் கொண்டு எமது மண்ணைக் காப்பாற்ற முன்வருவார்களா?

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலேதான் தமிழர்கள் பெரும்பாண்மை என்பதால் மட்டக்களப்பு மண்ணைக் காப்பாற்ற புலம் பெயர் தமிழர்கள் அதிக அக்கறை காட்டவேண்டும் இல்லையேல் திருகோணமலை அம்பாறை போன்று மட்டக்களப்பும் மூவின மக்களும் வாளுகின்ற தமிழர்களுக்கு சொந்தமில்லாத ஒரு பிரதேசமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

0 Responses to ஈழத் தமிழர்களின் தாயக மண்ணைக் காப்பாற்ற புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்களா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com