Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்துயரம்: கவிதை வடிவம் ஈழமாகரன்

பதிந்தவர்: தம்பியன் 28 October 2010

வாழிய தமிழே எங்கள்

வரலாற்றின் உயிரே இந்த

ஊழியின் மொழிக்குத் தாயே

உதிரத்தில் பதிந்த மாதே

ஏழையே இல்லாச் சாதி

ஈழத்துத் தமிழர் சாகக்

கோழையார் வந்த ஏட்டுக்

குறிப்பிலே வாராய் அம்மா!


வஞ்சகம் சூது கேடு

மனிதமே இல்லா நாடர்

அஞ்சவே ஒன்று கூடி

அழித்தனர் எங்கள் கூடு!

நஞ்சையே ஊற்றிக் கொல்லும்

நரியர்கள் இணைந்த தாலே

புஞ்சையும் நிலமும் பெற்ற

பூமியும் நெருப்பில் கண்டோம்!


கெட்டவர் ஆட்சி தன்னில்

கீழவர் ஆர்ப்பாட் டத்தில்

விட்டிலைப் போலே செத்து

வீதியிற் கிடந்தோம்! பக்கம்

ஒட்டியே இலங்கை யோடு

இந்திய நரகம் கூடி

பட்டினிற் தீயே பற்றப்

பார்த்துமே இருந்தார் அம்மா!


குஞ்சொடும் தாயும் பெற்ற

குழந்தையும் குடும்பம் ஒன்றாய்த்

தஞ்சமே இன்றித் திக்காய்த்

தறிகெட்டு ஓடும் போது

பஞ்சமும் பிணியும் கற்புப்

பாவையர் பறிப்பும் எற்றி

நெஞ்சமே இல்லார் கையில்

நிறைநிலம் அழிந்தே போச்சு!


இராட்சதர் இல்லை என்ற

இந்தநூற் றாண்டு தன்னில்

இராட்சதர் என்றே வந்த

இராசபக் சாவைக் கண்டார்!

திராட்சையைக் காலிற் போட்டுத்

தீய்த்தல்போல் தமிழர் சாகக்

கராட்டியைப் போலே நின்று

கனத்திடும் பேயைக் கண்டார்!


அகதியாய்ப் போன மாந்தர்

அவலத்தில் இடமே இன்றி

சகதியில் வாழும் நேரம்

சந்தியே தெரியாச் சிங்கர்

புகவொரு யாழ்ப்பா ணத்துப்

புறம்வந்து தெருவில் நின்று

தகதக வென்றார் ஆட்சி

தாங்கிட மகிழ்கின் றாரே!


தோப்போடு கிராமம் அள்ளித்

திருநிலத் தமிழர் ஓட்டிக்

காப்போடு சிங்க ளர்க்குக்

காவலே போட்டுப் பார்த்து

சாப்பாடும் பணமும் காட்டிச்

சரித்திரம் மாற்றி ஏட்டில்

ஆப்போடு ஏற்றும் ஆட்சி

அரசிலே தமிழர் செத்தார்!


பொன்விளை நிலமும் பெற்ற

பூமியும் பறித்து ஆங்கே

முன்தொடும் உறவே இல்லா

முகமிலாச் சிங்க ளர்க்குக்

கொன்றிடும் படையைக் காவல்

கொண்டிடக் குடியாய் வைத்துப்

புன்தொழில் செய்யும் ஆட்சிப்

புல்லரைப் பார்க்கின் றோமே!


போரிலே தோற்றுப் போன

புலியின்பின் வந்தார் ஆட்சிப்

பாரிய படையின் கையில்

பகடையாய்த் தமிழர் நின்றார்!

மூரியின் கையில் நின்று

மூர்க்கரால் கற்புக் கெட்டு

நாரியிற் சிசுவைச் சுமக்கும்

நாரியர் கண்ணீர் கண்டோம்!


கண்ணீரில் நனைகின் றோமே!

கனல்கொண்டு வாழ்கின் றோமே!

மண்ணோடு அழிகின் றோமே!

மகிந்தரின் படைகண் டோமே!

உண்ணாமல் இருந்தும் அந்த

ஊத்தையே கற்பைத் தின்ன

எண்ணாமல் இருப்போ மாநாம்

எங்களின் தாயே கேட்பாய்!


ஈழமாகரன் (மலேசியா)

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to ஈழத்துயரம்: கவிதை வடிவம் ஈழமாகரன்

  1. good feeling

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com