வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா அரசதலைவரான மகிந்த ராஜபக்சவின் தலைமையில் வவுனியாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.இதேவேளை உங்களை அழைத்தால் பிரச்சனைகள் தான் வருமென்று சிறிலங்காவின் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக மகிந்த ராஜபக்ச தலைமையில் வவுனியாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமையாகக் குற்றம்சாட்டி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் மக்களைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான விடயங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என வவு னியா அரச அதிபர் திருமதி பி. எஸ்.என். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பும் பொறுப்பு தமக்கில்லை எனத் தெரிவித்த திருமதி சார்ள்ஸ் அந்தப் பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திடமே இருக்கின்றதெனவும் "உதயனு'க்குத் தெரிவித்தார்.
கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து எம்.பிக்களும், வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களும் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் ஒரு எம்.பியைக் கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அரசுக்கு ஆதரவளிக்கின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு எம்.பிக்களையும், ஈ.பி.டி.பி மூன்று எம்.பிக்களையும் கொண்டுள்ளன. வட மாகாணத்திலுள்ள 15 எம்.பிக்களில் மொத்தம் ஆறு எம்.பிக்கள் அரசின் பக்கமுள்ளனர். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே ஐ.தே.கட்சி எம்.பியான விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்புக்கு, இக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படவில்லை. இது தமிழ் மக்களை அரசு திட்டமிட்டு புறக்கணிக்கும் ஒரு செயல் எனக் குற்றஞ்சாட்டினார் பிரேமச்சந்திரன்.
இதேவேளை எதிர்க்கருத்துக்களைத் தெரி விப்பார்கள் என்பதாலேயே மாவட்ட இணைப்புக் குழுக்கூட்டம் போன்ற அரச அபிவிருத்திக் கூட்டங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை அழைப்பதில்லை என்று தெரிவித்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
"வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவுகாண நடத்தப் படும் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப் பட்டால், முரண்பாடுகள் ஏற்படும். மக்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்படமாட்டாது. இதன் காரணமாகவே கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றி மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கி வருகின்றது' என்றார் ரிசாத் பதியுதீன்.
வவுனியா மாவட்டத்துக்கான இணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வவுனியா செயலகத்தில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சர் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கிளப்பிய பிரச்சினைகளுக்குப் பதில் அளிக்கையிலேயே இப்படிக் கூறினார்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வுப் பணிகளுக்கு அந்தப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், அக்கூட்டங்களில் பங்குபற்ற கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்தே சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார். "வன்னி மாவட்ட இணைப்புக்குழுத் தலைவரான உங்களது உத்தரவுப்படியா அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் உத்தரவுப்படியா கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று சிவசக்தி ஆனந்தன் அமைச்சரிடம் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர், கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பாமைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார். அழைப்பு அனுப்பப்படாமைக்கு என்ன காரணம் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கூட்டமைப்பினரைக் கூட்டங்களுக்கு அழைத்தால் அவர்கள் தெரிவிக்கும் விடயங்களுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும். அதன் காரணமாக மக்களின் பணிகள் தாமதமாகும். இதனால் கூட்டமைப்பினரைக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை'' என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் "எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வவுனியாவில் ஜனாதிபதி கூட்டும் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. அழைப்புக் கிடைத்தால், எமது மக்களின் நன்மை கருதிப் பங்குபற்றுவோம்'' என்றார் சிவசக்தி ஆனந்தன்.



0 Responses to கூட்டத்துக்கு அழைத்தால் வருவோம் - சுரேஷ் பிரேமசந்திரன்! உங்களை அழைத்தாலே பிரச்சனைதான் - ரிசாத் பதியுதின்