Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் இறுதிமுடிவு செய்யப்பட்ட விவரத்தை நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நால்வரது பெயர்களையும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தலைமைசெயலகம் மீளுறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலியாவுக்கான தேசிய செயற்பாட்டுக்குழு தலைவர் கலாநிதி சிவேன் சீவநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

உலகெங்கும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்றிருந்தது. புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழ்மக்களின் நம்பகரமான - ஜனநாயக அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்புக்கு உலகெங்கிலும் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்கள் தங்களது ஆணையை வழங்கியிருந்தனர்.

அதன் ஒரு கட்டமாக, கடந்த மே மாதம் 22ம் திகதி ஆஸ்திரேலியா நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முறைகேடானது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை செயலகத்திடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டினை விசாரணை செய்வதற்கு கடந்த செப்ரெம்பர் முதலாம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை செயலகம் விசாரணைக்குழு ஒன்றினை நியமித்திருந்தனர். இந்த விசாரணைக்குழுவில் சிட்னியை சேர்ந்த - பக்கச்சார்பற்ற - மூவர் அங்கம் வகித்தனர். இந்த குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தமது தீர்ப்பினை அறிவிக்கையில் - நியு சவுத் வேல்ஸ் மாநில தேர்தல் முடிவுகள் எந்த வேட்பாளரையும் பாதிக்கும் வகையில் இல்லை என்று தெரிவித்து தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த விளக்கங்களையும் வழங்கியுள்ளனர்.

மீளுறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி நாடு கடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலியா - நியு சவுத் வேல்ஸ் மாநில பிரதிநிதிகளாக

- குலசேகரம் சஞ்சயன்

- சேரன் சிறிபாலன்

- குணசிங்கம் தர்ஷன்

- பாலசிங்கம் பிரபாகரன்

ஆகியோர் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளையில் மற்றைய மானிலங்களில் இருந்து ஏற்கனவே 6 உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவாகியுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. - இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசு - மீளுறுதிப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியா நியு சவுத் வேல்ஸ் மாநில முடிவுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com