மாளிகாவத்தைப் பிரதேசத்தின் சேரிக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்ததாக கடந்த புதன்கிழமை மாலை இராணுவக் குழுவொன்று மர்மக்குழியொன்றைத் தோண்டி எதையோ புதைத்துவிட்டுச் சென்றுள்ளதால் அப்பகுதியெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.சுமார் 15 நபர்களைக் கொண்ட இராணுவக் குழுவானது இருட்டும் வேளையில் அப்பிரதேசத்துக்கு வந்துள்ளது. வந்திருந்த அனைவரும் இராணுவ உடையுடன் ஆயுதம் தரித்திருந்துள்ளனர்.
அப்பிரதேச மக்களை வெளியே எட்டிப் பார்க்க வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டு வீடுகளைப் பூட்ட வைத்து விட்டு அவர்களில் சிலர் அங்கிருந்த புற்தரையொன்றில் குழியொன்றைத் தோண்டியுள்ளனர்.
அதன் பின் அவர்கள் அந்தக்குழியை மூடி அதன் மேல் கொங்கிறீட் பலகை கொண்டு உறுதியாக மூடி விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் அதனைத் தோண்டினால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாகவும் பிரதேச மக்களை அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
இராணுவக்குழு அவ்விடத்தை விட்டகன்றவுடன் பிரதேச வாசிகளின் தகவலுக்கேற்ப அங்கு வந்த மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், வந்திருந்தவர்கள் எவரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்று தாம் அனைத்து மட்டங்களிலிருந்தும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாக கூறிவிட்டு, பிரஸ்தாப குழி பற்றி எதுவித விசாரணையும் மேற்கொள்ளாது சென்று விட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் கொழும்பு நகரில் வாழும் வசதி குறைந்த குடியிருப்பாளர்களை அகற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், மாளிகாவத்தை மக்களை அங்கிருந்து எழுப்புவதற்கான சதித் திட்டமொன்றாக இது இருக்கலாம் என்று அங்குள்ள மக்கள் ஐயம் தெரிவிக்கின்றனர்.
பிரஸ்தாப குழியிலிருந்து சட்ட விரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து, அதற்கு அப்பகுதி மக்களும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அது இருக்கலாம் என்று அவர்கள் ஐயம் தெரிவிக்கின்றனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மாளிகாவத்தையில் இராணுவத்தினர் தோண்டிய மர்மக்குழி