Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முகாம் மாற விரும்பாத அகதிகள்

பதிந்தவர்: தம்பியன் 16 November 2010

இலங்கையின் வடக்கே மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் உள்ள இராமநாதன் முகாமில் இருப்பவர்களை அதே தொகுதியில் உள்ள கதிர்காமர் முகாமுக்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இவ்வாறு இடம்மாறுவதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெரிவித்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்காக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என முகாம் வாசிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேர் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டார்கள். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்கள் படிப்படியாக அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு இப்போது சுமார் இருபதினாயிரம் பேர் இங்கு தமது மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருப்பதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதன் முகாமில் மாத்திரம் 4500 பேர் வரையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இங்குள்ளவர்களை வரும் 18 ஆம் திகதி கதிர்காமர் முகாமுக்கு இடம் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களுக்கு இங்குள்ள குடும்பங்கள் 19 ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராமநாதன் முகாமில் உள்ளவர்கள் கூறியுள்ளார்கள்.

புதிய இடத்தில் இந்த மக்களின் நலன்கள் கவனிக்கப்படும் என மனிக்பாம்முகாம் இராணுவத்தினர் உறுதியளித்துள்ள போதிலும், தற்போதுள்ள இடத்திலிருந்து தமது சொந்த இடத்தில் சென்று மீள்குடியேறுவதையே இவர்கள் விரும்புகின்றார்கள்.

மனிக்பாம் முகாமில் இருந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதையடுத்து, அங்கு எஞ்சியுள்ளவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வசதியாகவே இவ்வாறாக மக்கள் இடம்மாற்றப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மனிக்பாம் ஸோன் 4 எனப்படும் வலயம் நான்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக அண்மையில் அதிகாரிகளினால் கதிர்காமர் முகாமுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to முகாம் மாற விரும்பாத அகதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com