புலம்பெயர்ந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு கருதுகிறது. அண்மையில் துணை இராணுவக்குழு கருணா இந்த கருத்தை திவயின சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்து இருந்தார்.
அத்துடன் புலம்பெயர்ந்த மக்களை வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு கடுமையாக முயற்சிக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள தூதுவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் போதிய உறவை பேணவில்லை என்று ஸ்ரீலங்காவின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் குற்றம் சுமத்தி இருந்தார்.
மகிந்தவின் இலண்டன் விஜயத்தின் போது ஏற்பட்ட பின்னடைவுகளையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களை முன்னெடுப்பதற்கான தனியான தூதுவர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இதற்காக புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறந்த மதிப்பை பெற்றுள்ள "படித்த தமிழ் பிரமுகர்களின்" பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளுக்காக கே.பியின் சகபாடிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் இரகசியமாக நியமித்துள்ளதாகவும், ஐரோப்பிய மற்றும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் இருந்து அடுத்த சில மாதங்களுக்குள் இந்த முக்கியத்தர்கள் சிறீலங்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தை நசுக்கவும், அவர்களை கண்காணிக்கவும் முடியுமென அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான சில ஏற்பாடுகள் "தமிழர்களுக்கான அமைப்புக்கள்" என்ற போர்வையில் புதிய அமைப்புக்களை சிறீலங்கா புலம்பெயர் தேசங்களில் சில கூலிகளைக்கொண்டே ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.



0 Responses to புலம்பெயர்ந்த தமிழர்களை கண்காணிக்க சிறீலங்காவில் அமைச்சு