இது பற்றி தெரியவருவதாவது:
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 30 மாத கடுங்காவல் சிறை தண்டனை பெற்று வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பொன்சேகாவின் பிறந்தநாள் டிசம்பர் 18ம் தேதியாகும். சிறையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைக்காக வெள்ளிக்கிழமை அவர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் திரண்ட அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடினர்.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நீதிமன்ற வளாகத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் பொன்சேகா. தான் வெட்டிய கேக்கை தனது ஆதரவாளர்களுக்கும் தன்னை அழைத்து வந்த சிறை அதிகாரிகளுக்கும் அவர் வழங்கினார்.
இது தொடர்பாக இலங்கை அரசு இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கு பொன்சேகா பேட்டியளித்தார். இதையடுத்து அவரை பேட்டி அளிக்க அனுமதித்த சிறை அதிகாரியையும் வாகன சாரதியையும் இலங்கை அரசு இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மிகவும் சிறியதான எவ்வித வசதிகளுமற்ற சிறை அறையில் கைதி உடையுடன் உட்கார்ந்திருந்தபடியே சரத் பொன்சேகா நேற்றுத் தனது 60 வது பிறந்த நாளைக் கொண்டாடினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கென ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் நேற்று வெலிக்கடைக்குச் சென்றிருந்தனர்.



0 Responses to நீதிமன்றில் பிறந்தநாளை கொண்டாடிய பொன்சேகா