இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற நூற்றாண்டு விழாவும் வெட்டாப்பு சஞ்சிகை வெளியீடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய அதிபர் வி.கனகசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவு வர்த்தக விவகார பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
இந்தப் பாடசாலை பல கல்விமான்களை இந்த நூறு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது. அத்துடன் எமது விடுதலைப் போராட்டத்தில் 61 வருடபோராட்டத்தில் 30 வருடங்கள் அகிம்சை வழியில் போராடியுள்ளோம், 31வருடங்கள் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அந்த 31 வருட போராட்ட காலத்திலே பல போராளிகளை இந்த மண் தந்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இன்று இங்கு வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் கூட போரட்டத்தில் இருந்துதான் இன்று இந்த பிரதியமைச்சர் நிலைக்கு வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே நாங்கள் வரலாறுகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது என்பதையும் நான் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்று தமிழர்களை பரதேசிகள் என்றும் 10 நூற்றாண்டில் வந்த பரதேசிகள் என்றும் கூறுகின்றனர். எங்களது வரலாறுகள் என்பது கல்வியுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவேதான் நான் இங்கு கூறுகின்றேன் போராட்டங்கள் அழிக்கப்படலாம் போராட்டங்கள் மூலம் கிடைத்த தியாகங்கள் அழிக்கப்பட முடியாது என்பதைத்தான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்று வடகிழக்கில் போதைவஸ்துகளை பாவிப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. அப்படியானால் அதற்கு யார் காரணம். இதனை நாங்கள் சிந்திக்கவேண்டும். இதனை யார் தடுக்கவேண்டும் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு ஒரேயொரு இடம் கல்விக்கூடம் மட்டும்தான்.
இன்று நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய காலமாக இருக்கின்றது. நாங்கள் ஜனநாயக வழியில் ஒற்றுமைப்படுவோமானால் அது எமது இழந்த உரிமையையும் பெறக்கூடியதாக இருக்கும். எல்லோரும் நினைக்கின்றார்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று, அந்த மனோபாவத்தில் இருந்து நாங்கள் முதலில் மீளவேண்டும். ஒன்றுமே முடியவில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று எங்களது போக்கை மாற்றிக்கொண்டிருந்தால் எமது சமூகம் சீரழிந்துவிடும், அனைத்தும் சீரழிந்துவிடும். இதனை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் நாங்கள் எங்களது மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்களுக்காக நாங்கள் எங்களது உரிமையினை, அபிவிருத்தினை வென்றெடுக்கக்கூடிய எங்களது இலக்கினை வென்றெடுக்க கூடிய ஒரு அரசியல் தீர்வு எங்களிடம் வருகின்றதோ அந்த எல்லைவரும் வரையில் எங்களது அரசியல் பயணம் ஓயாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வடகிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு எந்தவகையான அரசியல் பலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றதோ அதேபோன்றுதான் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் பலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.
அதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். 2004ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றறோம். சிலர் எண்ணுகின்றார்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துவிட்டது பிரதியமைச்சு பதவிகளை பெற்றுள்ளது ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணையமுடியாது என கேட்கின்றனர்.
இது அவர்களின் கட்சியின் கொள்கை மற்றும் அவர்களது அபிவிருத்தி தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு. அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் உடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வைத்துள்ள உறவை நாங்கள் ஒருபோதும் துண்டிக்கமாட்டோம்.
எதிர்காலத்திலும் அவர்களுடன் இணைந்து வடகிழக்கில் ஒரு இணைந்த அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக எங்களுடன் கைகோர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக அவர்களுடன் சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். நடாத்துவோம்.
போராட்டத்தை ஒடுக்கிவிட்டோம், போராளிகளை கொன்றுவிட்டோம் இனிய அரசியல் தீர்வு தேவையில்லையென நினைக்கின்றார்கள்.
இப்போது வருகின்ற செய்திகளை பார்க்கின்றபோது எல்லாவெல மேதானந்த தேரராக இருக்கலாம், அமைச்சர் விமல் வீரவன்சவாக இருக்கலாம், அவர்களின் நினைப்பு அபிவிருத்திக்காகத்தான் சுமார் 61வருடங்களாக அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்கள் இடம்பெற்றன என்று.அதைத்தான் இன்று சிங்கள மக்களும் நம்புகின்றார்கள், ஏன் தமிழ் மக்களின் சிலரும் அப்படித்தான் நினைக்கின்றார்கள்.
நாங்கள் அபிவிருத்திக்காக போராடியிருந்தால் ஒரு கோட்டைக்கல்லாற்றிலே பாலம் வேண்டும் என்று போராடியிருந்தால் பாலம் கிடைத்தவுடன் போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம், மண்முனை துறைக்கு 61 வருடமாக போராடியிருந்தால் பாலம் கட்டிமுடித்தவுடன் எமது போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம், தொழில் கேட்டு போராடியிருந்தால் தொழில் கிடைத்தவுடன் எமது போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.
சமாதானம் என்றால் என்ன என்பது தொடர்பில் அவர்களுக்கு படிப்பிக்க வேண்டியுள்ளதாக இருக்கின்றது. கௌரவமான சமாதானம் என்று கூறுகின்றார்கள் எது கௌரவமான சமாதானம் என்ற அர்த்தம் தெரியாதவர்களாக உள்ளனர்.
படித்த அறிவுள்ள அமைச்சராக இருக்கக்கூடியவர்களும் இன்று நாட்டில் கௌரவமான சமாதானம் நிலவுவதாக கூறுகின்றனர். கௌரவமான சமாதானம் என்றால் என்ன?தமிழ் மக்களுக்கு வடகிழக்கில் உரிமைகள் கிடைத்துவிட்டதா எனக்கேட்டால் மௌனம்தான் பதிலாகக் கிடைக்கின்றது. இதுதான் இன்றுள்ள நிலை என்றார்.



0 Responses to போராட்டத்தை ஒடுக்கிவிட்டோம்! இனி அரசியல் தீர்வு தேவையில்லை: அரியநேத்திரன்