போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் நோக்குடன் மண்சுமந்த மேனியர் அமைப்பினருடன் சுவிஸ் வாழ் அமைப்புக்கள் சிலவற்றின் நிதியுதவியுடன் சுயதொழில் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ் சங்கத்தின் மண்சுமந்த மேனியருடன் இணைந்து சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கமும், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலதரப்பட்ட உதவிகளைச் செய்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்புத் தொகையாக தலா இருபத்து ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் அனுப்பிவைத்திருந்தனர்.
கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தையல் பயிற்சி, மீன்பிடி, பலசரக்கு வியாபாரம் போன்ற தொழில்களை முன்னெடுக்க உதவும் வகையிலேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக தலா ஆயிரத்து ஐநூறு ரூபா வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம் அனுப்பியிருந்தது.
இந்த மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் வரை குறித்த தொகை உதவியாக வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கரவெட்டி பிரதம தபால் அதிபர் அ.அருளானந்த சோதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சூழலியலாளரும், இயற்கை, பண்பாட்டு மரபுவளப் பேணுகை மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசனும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.இரட்ணகுமார், மருத்துவ கலாநிதி க.வேலும்மயிலும், மருத்துவ கலாநிதி சிவநேசன், சற்கோட்டை றோ.க.வித்தியாலய அதிபர் கே.இராஜதுரை ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
இதன் போது பெருமளவான மக்களும் பங்குகொண்டிருந்தனர்.



0 Responses to வடமராட்சியில் சுயதொழில் உதவியாக சுவிஸ் தமிழ்மக்களின் உதவிகள்!