ஆனால், அரசோ, இனங்களுக்கிடையிலான பிளவை மேலும் அகலிக்கும் விதமாகத் தேசிய கீதத்தைத் தமிழ் மக்களின் குரல் வளைக்குள் சிங்களத்தில் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது என சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் ‘மண்சுமந்த மேனியர்’திட்டத்தின் ஊடாக சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கமும், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறு (19-12-2010) அன்று வடமராட்சியில் கொற்றாவத்தை சித்தி விநாயகர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இங்கு உதவிகளைப் பெறுவதற்குக் கூடியிருக்கும் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். கடற்கோள், புயல் போன்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களாலும் பாதிப்புக்கள் ஏற்படும். இயற்கை அனர்த்தங்கள் சில மணித்தியாலயங்களிலோ அல்லது சில நாட்களிலோ தணிந்துவிடும். இவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை உதவிகளின் மூலம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட முடியும்.
ஆனால், நாங்கள் இயற்கையால் அல்ல, கொடிய போரினால் நிர்க்கதிக்கு ஆளானவர்கள். பல தசாப்த கால இனக்குரோத அரசியலாலேதான் இந்தப் போர் மூட்டி மூட்டி வளர்க்கப்பட்டது. எனவே, பெறும் பொருள் உதவிகளினாலோ, பண உதவிகளினாலோ போர்ப் பாதிப்புக்களில் இருந்து மீண்டு விட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இனங்களுக்கு இடையேயான இதய சுத்தியான நல்லிணக்கமும், நியாயமான அரசியல் தீர்வும் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே நாம் மீண்டும் நிமிர்ந்தெழ முடியும்.
போரினால் தமிழர் தரப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை இலங்கை அரசே வெளிப்படுத்த வேண்டும். நல்லிணக்கம் குறித்துப் பேசிவரும் அரசு, தேசியக் கொடியால் பெரும்பான்மையின் குறியீடாக வாள் ஏந்தி நிற்கும் சிங்கத்தை நீக்குவதாக அறிவித்திருந்தால் தமிழ் மக்களுக்கு அரசின் மேல் இறுக்கமான நம்பிக்கை பிறந்திருக்கும்.
ஆனால், அரசோ, இனங்களுக்கிடையிலான பிளவை மேலும் அகலிக்கும் விதமாகத் தேசிய கீதத்தைத் தமிழ் மக்களின் குரல் வளைக்குள் சிங்களத்தில் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது.
எந்த ஒரு நாட்டிலும் தேசிய கீதம் இரு மொழிகளில் இசைக்கப்படுவதில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது. கனடாவில் பிரஞ்மொழியிலும், ஆங்கிலத்திலும் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இப்படி பல் தேசிய இனங்கள் வாழுகின்ற பல நாடுகளில் பல மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன என்பது தான் உண்மை.
தென் ஆபிரிக்காவில் ஒரே தேசிய கீதம் பாடப்படுகின்றது. ஆனால், அது, அங்கு பேசப்படுகின்ற ஐந்து மொழிகளினாலும் ஆன வரிகளை உள்ளடக்கியிருக்கின்றது. இந்தியாவில் 300 மொழிகள் பேசப்பட்டாலும் அங்கு இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக சில அமைச்சர்கள் வாதிடுகின்றனர். அது இந்தி அல்ல. வங்க மொழியில் அமைந்த, ரவீந்திரநாத் தாகூரின் பாடலாகும். இந்தியாவின் சிறுபான்மை மொழியிலேயே அதன் தேசிய கீதம் பாடப்படுகின்றது.
ஒரு சூழலியலாளனாக, இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்தும் சிங்கத்தை பொருத்தமற்றதாகவே நான் கருதுகின்றேன். சிங்கம் சிங்கள மக்களின் குறியீடு. விஜயனின் தந்தையான சிங்கபாகு சிங்கத்துக்கு மகனாகப் பிறந்தவர் என்று மகாவம்சம் கூறுகின்றது.
சிங்கம் பௌத்த மதத்தின் குறியீடு. பௌத்த மதத்தைப் பரப்பிய அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த போதனைகளைப் பதிப்பித்த கல் தூண்களில் சிங்கங்களை இடம்பெறச் செய்தார். மொத்தத்தில், இலங்கையின் தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் சிங்கம் பெரும்பான்மையே ஆதிக்கம் என்கிறது.
இலங்கைத் தீவில் ஒரு போதும் வாழ்ந்திராத சிங்கத்துக்குப் பதிலாக, சிங்கள மக்களினதும் தமிழர்களினதும் பூர்வீக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப் புலியை தேசிய விலங்காகத் தேர்வு செய்திருந்தால் தமிழர்கள் தங்களுக்கெனத் தனியான அடையாளங்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் இரண்டு தரப்புக்களுமே பாரிய இழப்புக்களைச் சந்தித்த பின்பும் கூட அரசு வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் குறித்தும் பேசிவாறு, இனங்களுக்கு இடையேயான விரிசலையே மேலும் மேலும் அதிகரிக்கச் செய்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈழநேசன்



0 Responses to சிங்கத்தை விட சிறுத்தைப்புலியே பொருத்தமானது: பொ. ஐங்கரநேசன்