எம்வி சண் கப்பலில் கனடாவை சென்றடைந்த பெண் ஒருவர் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தமிழ்த்தாலியை அணிந்திருக்கிறார் எனவும் அதனால் அவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என கருதுவதாக கனேடிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரிக்கமுடிவெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
492 இலங்கைத்தமிழர்கள் எம்வி சண் கப்பலில் பயணம் செய்து கனடாவை சென்றடைந்திருந்தனர். கப்பல் கனடாவை அடைந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று தொடக்கம் இவரும் இவரது பிள்ளைகளும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கப்பலில் 380 ஆண்களும் 63 பெண்களும் 49 குழந்தைகளும் சென்றடைந்திருந்தனர். இவர்களில் 220 ஆண்கள் ஏற்கனவே விடுதலைசெய்யப்படுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுவிட்டதாக கனடாவின் குடிவரவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் எத்தனை ஆண்கள் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
தாயகத்தில் உள்ளபோது நூலகத்தில் பணியாற்றியதாக அப்பெண்மணி தெரிவித்தபோதும் குறித்த நூலகமும் விடுதலைப்புலிகளால் நிதியளிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என கனேடிய பாதுகாப்புத்துறையினர் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தமிழ்பெண்மணி சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி டக்ளஸ் கனன் இக்குற்றசாட்டுபற்றி தெரவிக்கையில் “எந்த அடிப்படையில் தமிழ்த்தாலியை விடுதலைப்புலிகள் அமைப்புடன் மட்டும் இணைக்கின்றார்கள். எந்த அடிப்படையில் இப்பெண் பணியாற்றிய நூலகம் விடுதலைப்புலிகளால் நிதியளிப்பு செய்யப்பட்ட நூலகம் என கூறுகின்றார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
அத்தோடு குழந்தைகளுடன் உள்ள பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தாலி அணிந்திருந்த பெண் தடுத்துவைப்பு: கனடாவில் சம்பவம்