கொழும்பில் மலபே பகுதியில் உள்ள டகம் மாவத்தையில் அமைந்துள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகத்தின் பூட்டுக்களை உடைத்து உள்நுளைந்த காடையர்கள் அங்கிருந்த கணணிகள் மற்றும் ஆவணங்களை தீயிட்டு கொழுத்திய பின்னர் அலுவலகத்திற்கும் தீ வைத்துள்ளனர்.
அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும், அலுவலகம் முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது.
இந்த சம்பவத்திற்கு முன்னர் லங்கா ஈ நியூஸ் இன் ஆசிரியர் பெனற் றுபசிங்காவை தொலைபேசியில் தொடர்புகொண்ட இனந்தெரியாத நபர்கள் அவருக்கு கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்திருந்தனர்.
சிறீலங்கா அரசின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்துவந்த இந்த இணையத்தளத்தின் ஆய்வாளர் பிரகீத் எக்நலிகொட கடந்த வருடம் காணாமல்போயிருந்தார். அதன் ஆசிரியர் சந்தறுவன் சேனாதீராவுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ராஜகிரியா பகுதியில் அமைந்திருந்த அதன் அலுவலகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் அது மலபே பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது.
சிறீலங்கா அரச தலைவரின் அமெரிக்க பயணம் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் கீழ் இயங்கும் கொலையாளிகளை கொண்ட கூட்டத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை வெளியிட்டதாலேயே லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறீலங்கா அரசினால் தீயிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








0 Responses to லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகம் தீக்கிரை (படங்கள் இணைப்பு)