12059 குடும்பத்தைச் சேர்ந்த 49,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் 37 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதம்விளைவித்துள்ளதுடன், கூலித்தொழில் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் பாட்டாளிகளினது வாழ்வாதாரத்தையும் மிகவும் பாதித்துள்ளது. கால்நடைகள் பெருமளவில் இறந்துள்ளன. இப்பொழுது கைக்குழந்தைகளுடன் பால்மா வாங்குவதற்குக்கூட வழியின்றி இருக்கின்றனர்.
வீட்டில் இருக்க முடியாத நிலை ஒருபுறம், வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமிருக்கும் பொழுதிலும் வெளியேற முடியாதநிலை மறுபுறமாக மக்கள் அல்லல் படுகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினால் களவுபோய்விடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
பாதைகளின் குறுக்காக ஓடும் வெள்ளநீர் சாலைகளை அரிப்பதாலும் ஆளுயரத்திற்கும் மேலாக ஒடுவதாலும் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. பாதைகள் சேதமுற்றிருப்பதால் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்-கண்டி ஏ9 வீதி பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மரக்கறி வரத்து வெகுவாகத் தடைப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சாரம் இல்லாத வீடுகளில் விளக்கு எரிப்பதற்கே கடினமான நிலை தோன்றியுள்ளது.
இன்று (04.02.2011) மதியம் 2.30மணிக்கு வவுனியா கச்சேரி கேட்போர் கூடத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் தொண்டு நிறுவனங்களிடமும் வர்த்தகசங்கத்தினரிடமும் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர்களும் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டு தாங்கள் நேரில் சென்று பார்த்துவந்த விடயங்களைத் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளும், நல்லுள்ளம் கொண்டவர்களும், உதவும் சிந்தனையுடையவர்களும் சிரமம்பாராது தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.



0 Responses to சகலரும் வவுனியா மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்