மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்சே உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவருகிறார்.
இலங்கையைத் தவிர யாரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னயை ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா எடுத்துச் செல்ல வேண்டும்.
சர்வதேச கடல் விதிகளுக்கு மாறாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா குற்றம் சுமத்த முடியும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு, மீன் பிடிக்கும் உரிமை கிடைக்க வேண்டுமானால் இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு உடன்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும்.
மீனவர் பிரச்னையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக நேர்மையுடன் நடந்துகொள்ளவில்லை. மீனவர்கள் பிரச்னை குறித்து நாடளுமன்றக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பும் என்றார்.



0 Responses to இலங்கையைத் தவிர யாரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை: ராஜா