தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்தோடு அறியத் தருகின்றோம்.81 அகவையுடைய திருமதி வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள் கடந்த பல மாதங்களாக பக்கவாத நோய் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எங்கள் தமிழீழத் தாயின் வயதும், இடியெனத் தாக்கிய மனதும் ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுக்காத நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், சிங்கள இனவாத அரசுகூட அந்தத் தாயார் மீது மனம் இரங்கி, அவர் மலேசியாவில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. மலேசியாவில் கிடைத்த மருத்துவம் பலனளிக்காத நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா சென்ற அவரை, விமான நிலையத்தில் வைத்தே தமிழக அரசு அவரை அதே விமானத்தில் மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது. இதன் மூலம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திருமதி சோனியா காந்தி அவர்களிடம் தனது எசமான விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துக்கொண்டார்.
பலத்த கண்டனங்களுக்குள்ளான நிலையில், தமிழக - இந்திய அரசுகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராகப் பலர் நீதி மன்றக் கதவுகளைத் தட்டிய காரணத்தால், தமது மனிதாபிமான சிந்தனைகளை மீள் தூசு தட்டிய இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் கிகிச்சைக்கான அனுமதி அளித்தது. தமிழக முதல்வர் கருணாநிதி தமழீழத் தாயாருக்கு வீட்டுக் காவல் போன்ற நிலையை ஒத்த நிபந்தனைகளை முன் வைத்த காரணத்தால், மனம் நொருங்கிப்போன அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பாத காரணத்தாலும் இந்திய - தமிழக அரசுகளின் போலி நாடகங்களை நிராகரித்தனர்.
இதனால், பார்வதி அம்மாள், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய நிலையில் அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார். இந்நிலையில் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பல நுறு வருடங்களாக முகவரி இழந்த நிலையில், அந்நியர் ஆட்சிக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த நாடற்ற தமிழினத்திற்கானதொரு நாடாக தமிழீழத்தை மீட்டு எடுக்கும் வீர வரலாற்றைப் படைத்த எங்கள் தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த அந்த வீரத் தாயாருக்கு உலகத் தமிழினம் வீர வணக்கம் செலுத்தும் இந்த வேளையில், பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுடன் இணைந்து, தமிழீழ மக்கள் பேரவையும் தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றது.
வரலாறு கொடுத்த வரமாக, எங்கள் தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த இந்த வீரத் தாய்க்கு கண்ணீரஞ்சலி செலுத்துவதுடன், எங்கள் தேசத்தை மீட்டெடுக்கும் எமக்கான வரலாற்றுக் கடமையினையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தின் விடுதலைக்கான பெரு நெருப்பைக் கருவிலே சுமந்த அந்த வீரத் தாயின் புகழுடல் தீயினுள் சங்கமிக்கப்போகும் இந்தத் தருணத்தில், புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் நாம் அனைவரும் தமிழீழ மண்ணை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் நாம் ஒன்றாக இணைந்து, வேகமாகப் பயணிப்பதே இந்த வரலாற்றுத் தாயாருக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதையாக இருக்கும்.
'தாயே! எங்கள் தமிழே!! நீங்கள் எங்களுக்கு வரமாக வழங்கிய தேசியத் தலைவர் அவர்களது பாதையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு, தமிழீழத்தை மீட்கும் மனோ பலத்தை எங்களுக்குத் தந்தருளும்' என்று எங்கள் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!



0 Responses to தமிழீழத் தாயாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியும், வீர வணக்கமும்! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை