Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணை கொல் வேந்தே - கிரிகாசன்

பதிந்தவர்: ஈழப்பிரியா 23 February 2011

நறுந்தமிழ்த் தேனும் நல்லிசைதிகழும்
உறுமலர்வாச இனிதெனு மழகும்
பெறுமிளங் கவிதை பலநிதம் மெழுதி
குறுநிலமாளும் திருவுடை வேந்தே

வெறுமையின் இதயம் வினைகெடு உணர்வும்
கறுமைகொள் இதயம் கண்ணிமை தழுவ
சிறுஅணிபோலச் சேரிருள்கொண்டாய்
மறமெடு வீரன், மாபெரும்தலைவன்

ஒளிர்பெருஞ்சோதி உணர்வினில்தமிழன்
விழிகளில் நேர்மை வியனுறதிறனும்
கொளுமெம ஈழக் கொற்றவன் அன்னை
விழுபிணியோடு வேண்டிய மருந்து

உளதெனவிரும்பி உனதெனும்தேசம்
தளருறும் வயதில் தஞ்சமென்றேக
குளமதில் மீனைக் கொண்டிடநீயும்
மெலிசிறுமீனை செருகிடத் தூண்டில்

உயிர்கொல்லும் செயலாய் உதவிட மறுத்து
உயர் பெருநிதியம் எண்ணியமனதில்
வயிரமென்றிளகா வஞ்சனையோடு
மயிரினும் இழிவாய் மறுத்தனை தானோ

கடலதில் எறியும் கதியினைப் பெறினும்
திடமொடு மரமாய் தோணியென்றாகி
உடனுயிருர் காக்க ஓங்கி மிதப் பேன்
உடைந்திடமாட்டேன் உயிர்களைக் காப்பேன்

எனநிதம்கூறும் எழிலுறு மொழியை
நினதிடமுடைய நெஞ்செனநம்பி
இனமழிவுறவே இறையெனக் காவாய்
எனவுயிர் வேண்டி ஏழைகள்கதறி

ஒரு கரம்நீட்டி உதவென அழுதோர்
இருஎனக்கூறி இரைகடல்நடுவே
பெரும் அலை மூழ்க படகினை கவிழ்த்தே
உயிர்களின் அழிவுக் குடந்தை யென்றானாய்

பெருமலிவான பணிவுடன் நிறமும்
மருகிய கருணை மனதினில்தேசம்
பெருகிய பண்போ பிறவியில் அறியா
மருமகள்கையும் விரியுமென்றேங்கி

திருவோடு ஏந்தி தெருவினி லேகும்
ஒருவனையொத்து இருந்ததும் என்ன?
பெரும் பழநூல்கள் நற்றிணையோடு
குறுந்தொகை கலியும் குண்டலகேசி

மணிமேகலையும் மாபெரும்வீரம்
துணிவுடன் கூறும்புறநானூறும்
அணிமலராகும் அகநாநூறும்
மணிமுடிவேந்தே மாசறக் கற்றாய்

வீரமும் வாழ்வும் வியந்திடுமிவைகள்
தருவன இதுவோ, தரணியில் மானம்
தெருவினில்விட்டு திரியெனக்கூறி
பெருகிடும்திறையே பெரிதெனவிளம்பி

இலக்கியம்யாவும் இருந்ததோ நாளும்
கலங்கிய மனதும் கயமையும்கொண்டு
விலங்கினமொத்த இலங்கையின்மன்னன்
நலமுறவாழ்த்தும் நடிகனென் றானாய்

ஒருகையின்வாளை ஒங்கியே வெட்டி
மறுகையில் வீழும் தலையினைத் தாங்கி
பெருமனதோடு காத்தனன் என்று
திருகிடதாளம் செய்வதுமேனோ?

0 Responses to கருணை கொல் வேந்தே - கிரிகாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com