இன்று மாலை 5மணி வரை தீருவிலில் அன்னை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நாளை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணிக்கு தகனத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
இதேவேளை, பார்வதியம்மாளின் பூதவுடலுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கூட்டமைப்புப் பிரமுகர் பிருந்தா ஆகியோர் நேற்று அங்குசென்று அஞ்சலி செலுத்தினர்.
பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப்படுகிறது.
திருமாவளவன் ஏற்கனவே ஒரு தடவை வல்வெட்டித் துறைக்கு வருகை தந்து பார்வதி அம்மாளைச் சந்தித்து அவரது நலன் குறித்து விவரமறிந்து சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்ட வேண்டாம். அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் பிரபாகரனின் பெயரைப் பாவிக்க வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.
இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். பிரபாகரன் பெயரைக் கொண்ட அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
அஞ்சலி சுவரொட்டிகளில் பிரபாகரன் பெயரைப் பாவிக்க வேண்டாம் எனவும், "வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள்" எனப் பாவிக்கும்படியும் இராணுவத்தினர் பணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ அன்னைக்கு சரவணபவன் எம்.பி, கூட்டமைப்பின் பிரமுகர்கள் அஞ்சலி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரின் மறைவையொட்டி வல்வெட்டித்துறை சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அன்னாரின் புனித உடல் வைக்கப்பட்டள்ள தீருவில் மைதானத்தில் பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றார்கள்.
இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம், சுந்தரம் திவகலாலா ஆகியோர் அன்னாரின் புகழுடல் வைக்கப்பட்டுள்ள சதுக்கத்தில் வைத்து தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
வல்வெட்டித்துறையில் வீதிகள், பொதுஇடங்கள் எனப் பல இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. அத்துடன் வாழைகள் தோரணங்களும் கட்டப்பட்டு வருகின்றன.







0 Responses to (2ம் இணைப்பு) தேசத்தின் தாயின் பூதவுடலுக்கு தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலி: பூதவுடல் நாளை மாலை தகனம்