நேற்றைய தினம் (24.02.2011) பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நீக்கக்கோரி ஜே.வி.பி கொண்டுவந்த தீர்மானத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் உரையாற்றும்போதே மேலுள்ளவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
இப்போது யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதாகவும் எங்கு வேண்டுமானாலும் தமிழ் மக்கள் சென்றுவரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் கடந்த 22 ஆம் திகதி கூறியிருந்தார். ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள சூழலைப் பார்க்கின்றபோது அவ்வாறான ஒரு நிலமை இல்லை. குறிப்பாக ஒரு மத பக்தன் கூட சுதந்திரமாக அங்கு சென்றுவரக் கூடியதாக இல்லை.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயார் இறந்த மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்கு நானும் அங்கு சென்றிருந்தேன். அங்குள்ள மக்களை அந்த மரணவீட்டில் கலந்துகொள்ள விடாமல் படையினர் தடுத்திருக்கிறார்கள். ஆகவே அங்கு ஒரு சுதந்திரமான நிலமை இல்லை.
இன்னுமொரு கேவலமான செயல் நேற்று அங்கு இடம்பெற்றிருக்கின்றது. ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இறந்தால் அவரின் உடலை எரித்து அந்த சாம்பலை சமய முறைப்படி கடலில் வீசுவார்கள். அதன்படி அந்த தாயாரின் பிரேதம் எரிக்கப்படுகின்றபோது நாய்களைக் கொன்று அந்த தாயாரின் உடல் எரிக்கப்படுகின்ற தீயில் போட்டு மிகவும் கேவலமான செயலைச் செய்து அவரின் அஸ்தியை எடுக்க முடியாமல் அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றது. உலகில் எங்குமே இவ்வாறான செயல் இடம்பெற்றிருக்கவே முடியாது.
மேலும் மட்டக்களப்பில் அண்மையில் இரு தடவைகள் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அனேகமானோர் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்திருந்தார்கள். 143,000 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. 94,000 வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றது. அதைவிட 25,000 ஏக்கரில் மேட்டுநிலப் பயிர் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால பாதிக்கபட்டவர்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த பணத்தை வைத்துக்கொண்டு யாருக்கு வழங்குவதென தெரியாமல் இருக்கின்றது. இதனால் அங்கு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. நேற்றுக்கூட மட். போதனா வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள்.
மட்டக்களப்பிற்கு 100 மில்லியன் ரூபா நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அந்த நிதி முழுவதும் நிவாரணத்திற்காக மக்களுக்கு வழங்கப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய நிவாரணங்கள்தான் மக்களுக்கு ஒழுங்காக சென்றிருக்கின்றது. எனவே அங்கு ஒரு பூரணமான முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஆனால் இங்கு உள்ள அமைச்சர்கள் கூறினார்கள் அவசரகால சட்டம் இருப்பதனால்தான் வெள்ள நிவாரணங்களை குறித்த நேரத்திற்கு ஒழுங்கான முறையில் வழங்கி மக்களைக் காப்பாற்றக் கூடியதாக இருந்ததாக. இந்த இடத்தில் நான் கேட்கின்றேன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாண் கொடுப்பதற்கு அவசரகால சட்டம் தேவையா? அல்லது நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு அவசரகால சட்டம் தேவையா?
அடுத்ததாக வடக்கு கிழக்கின் பல இடங்களில் தேர்தல் வைக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தேர்தல் பற்றி அறிவித்தல் செய்யும்போது அங்குள்ள சூழ்நிலை பற்றி தேர்தல் ஆணையாளருக்கு தெரியாதா?
எனவே இந்த அவசரகாலச் சட்டத்தினால் மக்கள் தொடர்ந்து அடிமைகளாகவும் துன்பப்டுபவர்களாகவுமே உள்ளனர். எப்போது இந்த சட்டம் இல்லாமல் போகின்றதோ அன்றுதான் சகல மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.



0 Responses to மகிந்த சொல்வதைப் போல் தமிழ் மக்கள் எங்குமே சுதந்திரமாக நடமாட முடியாது: பா.அரியநேத்திரன்