Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுட்ட பழம் வேண்டும் - கிரிகாசன்

பதிந்தவர்: தம்பியன் 25 February 2011

ஆறாது ஆறாது நெஞ்சம் -இன்னும்
ஆவென் றழுதாலும் மிஞ்சும்
மாறாத துன்பங்கள் என்றும்- என்
மண்ணுக்கு மட்டுமா சொந்தம்

நீறாக போகுது ஈழம் -கொலை
நிற்கவே இல்லையே இன்னும்
ஆறாகி இரத்தமும் ஓடும் -அதில்
ஆடிக் குளிக்கும் பூகோளம்

வேறாகித் துண்டாகும் மேனி -அதை
வெட்டுவர் புத்தரின் சாதி
தாறுமா றாகவே பாவி -எமைத்
தள்ளி நிரப்பிடும் குழி

தாயான பெண்ணவள் பாவம் -அன்னை
தந்த துலகுக்கு வீரம்
தேயாத செங்கதிர் ரூபம் -அவன்
சிந்திப்ப தோ சுதந் திரம்

ஏதும் வஞ்சமற்ற அன்னை -அவள்
ஈந்தவள் எங்கள் தலைவன்
தீதறியார் என்று எண்ணி பல்
தூணை நிறுத்தினர் சுற்றி

கல்லென்று எண்ணியே நம்ப -அந்த
கயமைகொண்டவர் சுற்றம
மண்ணை நிரப்பிய தூணாய் அவர்
மாறிக் கொடுமையைச் செய்தார்

காலம் கனிந்திடும்போது அவர்
கட்டிய கோட்டை இடிய
காலை எதிரியின் கையாய் இரு
கண்முன் இடிந்து விழுந்தார்

பேயாம் பகைவர்கள் வந்து- எம்
பின்னே கொளுத்தியபோது
தீயாம் எரிந்தது பற்றி - எங்கள்
தீவினில் எங்கணும் சுற்றி

காத்தோம் சுதந்திரக்கனி -அது
கையில் வருமென இனி
பூத்த நெருப்பில் உடைந்து அது
பொத்தென வீழ்ந்திடப் போச்சு

பேய்கள் சிரித்தன கத்தி- எங்கள்
பெண்கள் அழக்கண்ணீர் வற்றி
நாய்கள் குரைத்தன சுற்றி -சன
நாயகம் செத்தது வெட்டி

கேட்டோம் சுதந்திரக் கனி -அது
கொள்ள வேண்டுமடா இனி
கெட்டிடுமோ தீயில் பழம் -இல்லை
கட்டிபொன்னில் செய்த பாளம்

கண்களை மூடாதே அம்மா- அட
எங்கே உன்கண்மணி யண்ணா
மண்ணில் சுதந்திரதீயாம் - அது
மாறமுன் னேவரு வியாம்

சூரியக் குஞ்சுதான் எங்கே -பக்கம்
சுற்றி எரிதீயில் தொங்கும்
சுட்ட பழம்தனை எட்டி -கையை
விட்டு எடுத்திட வேண்டும்

பாலில் விழுந்ததோர் பழம் -அது
பாட்டிசொன்ன மொழிபழம்
தீயில் விழுந்ததாம் தங்கம் -நாம்
தேடும் பொன்னாம்சுதந் திரம்

சுட்டிட பொன்னோ மிளிரும் ஒரு
சுந்தர ரூபமொ ளிரும்
விட்டிடு நம்பிக்கை இன்மை -வரும்
வீரமகன் காலம் அண்மை

இன்று பரிதாபம் தோழா -இது
ஏன் எமக்கானது கூறாய்
சொந்த மண்ணை விற்ற தாலும்- வேறு
சொல்லிக் கொடுத்தத னாலும்

ஒற்றுமை கொண்டிடில் எம்மை -இந்த
ஓடு முலகெதிர் வந்தும்
சத்தியமாய் வெல்லமாட்டார் -சற்று
புத்தியெடு சின்னதம்பி

பச்சை ரத்தமோடும் தோலும்-சரி
பாதிதான் மேனியில் பாராய்
மிச்சம் எருதோடை தோலாய்-அதன்
மீது சுரணை சூடில்லை

0 Responses to சுட்ட பழம் வேண்டும் - கிரிகாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com