சிறிலங்கா அரசாங்கம் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தயாராகி வந்த போதே, இந்த அறிக்கை அதற்கு முன்னர் வெளியாகி விடும் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக- கடந்த 12ம் திகதி அறிக்கையைக் கையளித்தது நிபுணர்கள் குழு.
இந்த நிபுணர்கள் குழு விவகாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனையும் பாடாய்படுத்தி விட்டது.
இதை அமைத்த போதே அதற்கு சிறிலங்காவில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.
அதையெல்லாம் சமாளித்து ஒரு வழியாக சிறிலங்கா தொடர்பான ஆலோசனை அறிக்கையைப் பெற்றுவிட்டார் பான் கீ மூன்.
சிறிலங்கா தொடர்பான பான் கீ மூன் பல சந்தேகப்படும் படியான நகர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், அவரால் சிங்கள அரசைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
196 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட கையோடு- போர்க்குற்றவாளியான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் கையில் அதன் பிரதி ஒன்று ஒப்படைக்கப்பட்டது.
போர்க்குற்றவாளி ஒருவரிடமே போர்க்குற்ற அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இதற்கு முன்னர் ஐ.நாவுக்கு ஏற்பட்டிருக்காது
சிறிலங்கா அரசு மீதும் புலிகள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் இந்த அறிக்கையை ஒரு இராஜதந்திர மரியாதையின் நிமித்தமே சிறிலங்கா அரசின் பார்வைக்கு வழங்கப்பட்டது.
சிறிலங்காவின் பதில் கிடைத்ததும் அதையும் சேர்த்து வெளியிடுவதற்கே பான் கீ மூன் முடிவு செய்திருந்தார்.
அந்தளவுக்கு பான் கீ மூன் சிறிலங்காவுக்கு சார்பாகவே நடந்து கொண்டார்.
அதுமட்டுமன்றி இந்த அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வின் ஒளிப்படத்தைக் கூட பான் கீ மூன் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கீ மூனின் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒளிப்படங்களின் மூலம் ஆவணமாக்கப்படுகின்ற போதும்- இந்த அறிக்கை கையளிப்பு பற்றிய ஒரு படம் கூட வெளியாகவில்லை.
அந்தளவுக்கு இந்த விவகாரத்தை அவர் இரகசியமாக வைத்திருக்கப் பார்த்தார்.
முன்னர் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் பான் கீ மூனை சந்தித்த விவகாரத்தை இன்னர் சிற்றி பிரஸ் படத்தோடு வெளியிட்டதால், பான் கீ மூன் இம்முறை அதற்கான எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
ஆனால் பான் கீ மூன் இந்த அறிக்கை தொடர்பாக கையாண்ட எல்லாவிதமான இரகசியத் தன்மைகளையும் சிறிலங்கா அரசு மதிக்கத் தவறிவிட்டது.
இந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அதன் பிரதியை உடனடியாகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பினார்.
சிறிலங்கா அதிபர், முக்கியஅமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் என்று பலரும் அதை ஆராய்ந்தனர்.
ஆனாலும் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தமக்கு அந்த அறிக்கை கிடைக்கவேயில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.
அவர் அவ்வாறு கூறிய சில நிமிடங்களிலேயே வெளிவிவகார அமைச்சு, நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பரிசீலனை செய்வதாகவும், அது குறைபாடுகள் நிறைந்ததென்றும் சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது.
அதை நிராகரிப்பதாக கூறிய வெளிவிவகார அமைச்சு விரிவான பதில் பின்னர் வெளியிடப்படும் என்று கூறியது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அவசரமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை போல அது தோன்றினாலும், அது சிறிலங்கா அரசு கையாண்ட ஒரு தந்திரமே என்பதில் சந்தேகம் இல்லை.
அதுமட்டமுன்றி நிபுணர்கள் குழுவின் அறிக்கையையும் சிறிலங்கா அரசு ஊடகங்களுக்கு கசிய விட்டது.
சனியன்று காலை ‘ஐலன்ட்‘ நாளிதழில் வெளியான அறிக்கையின் ஒரு பகுதி ஐ.நாவை சினங்கொள்ள வைத்து விட்டது.
பான் கீ மூன் நினைத்திருந்தால் இந்த அறிக்கையை உடனடியாகவே வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் மகிந்த ராஜபக்ஸவின் பதிலையும் இணைத்தே வெளியிடக் காத்திருந்த பான் கீ மூனுக்கு சிறிலங்கா அரசின் இந்தச் செயல் கடுப்பை ஏற்படுத்தியிருந்த்ஷது.
பான் கீ மூன் விடயத்தில் சிறிலங்கா அரசு தனது இராஜதந்திர விழுமியங்களை ஒருபோதும் பின்பற்றவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது பான் கீ மூனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது தொடக்கம். நிபுணர்கள் குழுவை அனுமதிப்பதாகக் கூறிவிட்டு விசாரணை நடத்த முடியாது என்று கூறியது வரை மட்டும் அது நிற்கவில்லை.
நிபுணர்கள் குழுவை இரகசியமாக சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் சந்தித்த விவகாரத்தை ஐ.நா மூடி மறைத்த போதும்- சிறிலங்கா தரப்பில் இருந்தே அது வெளியே கசிய விடப்பட்டது.
இப்போது நிபுணர் குழுவின் அறிக்கையையும் கசிய விடப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஐ.நாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்துகின்றன.
வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இரகசியம் பேணுதல் என்பது முக்கிமானது.
பல உண்மைகள் தெரிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது தான் அது.
ஆனால் பான் கீ மூனுடன் சிறிலங்கா அப்படி நடந்து கொள்ளவில்லை.
சிறிலங்கா அரசு போல பான் கீ மூன் நடந்து கொண்டிருந்தால், அதன் பாதிப்புகளை சிறிலங்கா பாரியளவில் சந்தித்திருக்கும்.
பான் கீ மூனை கழுத்தறுப்பது தான் இப்போது சிறிலங்காவின் முதன்மை வேலையாக உள்ளது போலும்.
பான் கீ மூன் எத்தகைய நெகிழ்வுப் போக்குடன் இருந்தாலும், அதை மதிக்காமல் மகிந்த ராஜபக்ஸ, அவருக்கெதிராக பிரகடனப்படுத்தாத போரைத் தொடுத்துள்ளார் என்பதே உண்மை.
சிறிலங்காவில் மே தினம் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான, பான் கீ மூனுக்கு எதிரான ஒரு பெரும் பிரசார யுத்தமாக அரங்கேறப் போகிறது.
இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி மகிந்த ராஜபக்ஸ தனது பலத்தைக் காட்டப் போகிறாராம்.
இதன்மூலம் அவர் மீண்டும் செய்ய நினைப்பது பான் கீ மூனையும், ஐ.நாவையும் மிரட்டுவது தான்.
அவர் மட்டும் அதைச் செய்யவில்லை.
ஐ.நா கைவிட்டால் சீனாவிடம் ஓடுவோம் - ரஸ்யாவிடம் அடைக்கலம் தேடுவோம் என்று மிரட்டுகிறார் கோத்தாபய ராஜபக்ஸ.
இந்த விவகாரத்தை வைத்து சிறிலங்கா அரசு உலக நாடுகள் மத்தியில் பிளவுகளையும், பிரச்சினைகளையும் உருவாக்கி மையப் பிரச்சினையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படப் போகிறது.
சிறிலங்கா அரசு இப்போது போர்க்குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்- அடுத்த கட்டமாக எதையும் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தன் மீதான எல்லாவித நெருக்கடிகளையும் தீர்க்க சிறிலங்கா அரசு உலகளாவிய ரீதியான குழப்பத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறது.
சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் சந்திக்கு வரத்தொடங்கி விட்ட நிலையில் மகிந்த ராஜபக்ஸவுக்கு மகாவசம்ச சக்கரவர்த்தி என்ற கனவு கலைந்து விடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
அதுமட்டுமன்றி அவர் மீண்டும் மின்சாரக்கதிரை பற்றிப் பேசியுள்ளார்.
மின்சாரக் கதிரை பற்றிய அவரது பேச்சுகள் சாதாரணமானவை அல்ல- அச்சத்தில் அடிமனதின் ஆழத்தில் இருந்தே அது பிறந்திருக்கிறது.
நிபுணர்கள் குழு சிறிலங்கா அரசை மட்டும் குற்றம்சாட்டவில்லை புலிகளையும் குற்றம்சாட்டியுள்ளது. ஏன் ஐ.நாவைக் கூட குறை கூறியுள்ளது.
இந்தநிலையில் மற்றெல்லாத் தரப்பினரும் வாயை மூடிக் கொண்டிருக்க சிறிலங்கா மட்டும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிக்க நினைக்கிறது.
இதெல்லாம் மேற்குலகின் சதி என்று சிறிலங்கா அரசு கூறினாலும் அதை எத்தனை நாடுகள் அங்கீகரிக்கப் போகின்றன என்பது கேள்வியாகவே உள்ளது
சிங்கள அரசின் சதிவலைக்குள் எத்தனை நாடுகள் விழப் போகின்றன?
சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு உதவி வழங்கிய நாடுகளுக்கு இந்தப் பாவத்தில் பங்குள்ளதா? என்பன போன்ற பல விடயங்கள் இனி அலசப்படப் போகின்றன.
குற்றம்செய்தவருக்கு மட்டுமன்றி குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தோரையும் சட்டம் தண்டிப்பது வழக்கம்.
அப்படிப் பார்த்தால் போர்க்குற்றங்களுக்கு உதவியாக நின்ற நாடுகளும், சர்வதேச சமூகத்தின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலை வரும்.
ஆனால் அது நடக்குமா, சிங்கள அரசு போர்க்குற்றங்களுக்காக கூண்டில் ஏற்றப்படுமா என்பதை ஐ.நா தான் தீர்மானிக்க வேண்டும்.
முகிலன்
ஈழநேசன்



0 Responses to பான் கீ மூனை விழுத்துவாரா மகிந்த