இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விடயத்திலும் மஹிந்த ராஜபக்ஷவை விட அவர் மேற்கொண்ட யுத்தத்துக்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற நாடுகளே பொறுப்புக் கூற வேண்டுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை மையமாக வைத்துக் கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் நாட்டின் தலைவருடைய கழுத்தைப் பிடித்து யுத்தக் குற்றச்சாட்டுகளுக்குள் சிக்க வைக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரிய விடயமாகும்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளை யுத்த வலைக்குள் வீழ்த்துவதும் அதன் பின் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நாடுகளில் தமது மூக்கை நுழைப்பதும் மேற்கத்தேய நாடுகளின் வழமையாக இருந்து வருகின்றது.
சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு அவர்களின் மனித உரிமைகளுக்காக என்னுடன் உலகம் முழுவதும் சென்று குரல் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாது போனது துரதிருஷ்டவசமானதாகும்.
அதன் காரணமாகவே இன்று மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மேற்கத்தேய ஏகாதிபத்திய சக்திகளின் சதிவலைக்குள் சிக்குண்டு, தவிக்க நோ்ந்துள்ளது. ஆயினும் நான் அன்று தொடக்கம் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சரியான புரிதல்களைக் கொண்டிருப்பதுடன், அது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரவும் செய்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to மஹிந்தவை விட அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் யுத்தக்குற்றங்களை இழைத்துள்ளனர்