Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.

மே மாதம் 18ம் திகதி மாலை 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேணில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.

விக்ரோறியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கிறின் கட்சியின் மத்திய மெல்பேண் நாடாளுமன்ற உறுப்பினர் அடம் பான்ற், கிறின் கட்சியின் மெல்பேண் மாநில செனட்டர் கலாநிதி ரிச்சர்ட் டி நட்டால், விக்ரோறிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன்ட், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஜனனி, வண.பிதா டீக்கன், லிபரல் கட்சியின் உறுப்பினரும், இந்திய தமிழ் சங்கத் தலைவருமான ஆஸ்டன் அசோக்குமார் மற்றும் ஏனைய அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள் வன் ரட், சூ போல்ற்றன் ஆகியோரும் உரையாற்றினர். ‘முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்’ என்ற பாட்டிற்கு இளைஞர் ஸ்ரீராம் சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார். அவருடைய தங்கை கீதா “பூமிப் பாட்டு”என்ற மைக்கல் ஜக்சனின் ஆங்கில பாட்டை உருக்கமாக பாடி, பலரதும் கவனத்கை ஈர்த்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஐநாவுக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இத்துடன் இந்த மனிதப் படுகொலைகளைப் பற்றியும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் பதாதைகளும், படங்களும், உருவச்சிலைகளும் அங்கு பல்லின மக்களின் கவனத்தினை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு, பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற பல்லின மக்களுக்கு தொண்டர்களினால் வழங்கப்பட்டது.

இதேவேளை மாலை ஆறு மணிக்கு சிட்னியின் மாட்டீன் பிளேசில் ஆரம்பமான நினைவேந்தல் நாள் நிகழ்வில் 600 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் விதையான உறவுகளுக்கு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.

முன்னாள் நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஜட்ஜ் (Virginia Judge) கிறீன் கட்சியைச் சேர்ந்த பெடரல் செனட்டர் லீ றேனான் (Lee Rhiannon) நியு சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் சூபிறிஜ் (David Shoebridge) நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த சேரன் ஆகியோர் உரையாற்றினர்.

இதேவேளை மதியம் முதல் மாலை ஆறு மணி வரை தமிழ் இளையோர் அமைப்பினர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை, இந் நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஊர்தியில் சென்றும் விநியோகித்தனர். 3000 இற்கும் மேற்பட்ட ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டோர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசை உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரியதுடன் அண்மையில் சிறிலங்கா கடற்படைத்தளபதி ஒருவரை தூதுவராக ஏற்றுக்கொண்டமைக்கும் தமது அதிருப்தியையும் தெரிவித்தனர்.

மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் பெருமளவில் திரண்டு வந்து, முள்ளிவாய்க்காலில் வித்தாகிப்போன எம்மக்களையும் எமது போராளிகளின் கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

0 Responses to ‘மே 18’ அவுஸ்திரேலியாவின் ‘தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com