2009 மே மாதம்., இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. உலகமே பார்த்துக் கொண்டிருக்க ஒரு இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழிவுக்கு முதல் மூன்றாம் நாள் பலர் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியை ஏந்தியவர்களும் எல்லாவற்றையும் இழந்த மக்களும் திசையறியாது நிர்க்கதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் யாராலும் மறக்க முடியாத மே மாதம். கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வந்த யுத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்த காலம். கொத்துக் குண்டுகளும் விமானங்களும் எறிகணைகளும் துப்பாக்கிளும் பேசிய காலம். எங்கள் காலத்தில் தான் அந்தப் பேரூழி நடந்தது. அந்த பேரூழி நடந்து முடிந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. இப்பொழுதும் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத கொடுமையான நாட்களாக வன்னிப் போரின் இறுதி நாட்கள் மிக உக்கிரமாய் எரிகின்றன.
ஈழத்தில் நடந்தது என்ன என்பது உலகத்திற்கே தெரியும். ஈழத்தில் மக்கள் ஏன் போராடினார்கள், போராளிகள் ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அறுபதாண்டு கால அரசியல் போராட்டமும் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும் ஈழப் போராட்டத்திற்கு வழங்கிய கனதி என்பது நான்காம் நட்ட ஈழப் போராட்டத்தில் மிக பிரமாண்டமாக வளர்ந்திருந்தது.
தமிழ் மக்கள் காலம் காலமாக வாழந்து வந்த நிலப்பகுதி, அவர்களுக்குரிய அதிகாரங்கள், தங்களை நிர்ணயிக்கிற உரிமை என்று அடிப்படையான உணர்வுகளிலிருந்து ஈழப் போராட்டம் வெடித்தது. ஆனால் ஒரு போராட்டத்தை அதன் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டிருப்பது என்பது மக்களின் மனங்களில் பல விம்பங்களை உருவாக்கியிருக்கின்றன.
ஒரு குழந்தையை கொன்று போடுவதைப் போல, அழகான பளபளப்பான ஒரு கனவைக் கொன்று போடுவதைப்போல, தளைத்து கிளை பரப்பிய ஒரு உயிரை கொன்று போடுவதைப் போல ஈழப் போராட்டம் கொன்றழிக்கப்பட்டது. உலகம் இதை எப்பொழுதோ எதிர்பார்த்திருந்தது. உலகம் இதை எப்பொழுதோ திட்டமிட்டிருந்தது.
இரத்தத்திற்கும் சதைகளுக்கும் அலையும் பெரு அதிகார உலகம் இப்படித்தான் ஒடுக்கப்படுகிற மக்களின் போராட்டக் களங்களை உருமாற்றி சிதைத்து விடுகின்றன. ஏன் இந்த மக்கள் போராடினார்கள் என்பதை உலகம் தெளிவாக அறிந்திருந்த பொழுதும் ஏன் இந்த மக்கள் அழிக்கப்படக்கூடாது என்பதை நிகழ்த்திக் காட்டிருக்கிறார்கள்.
எரியும் அந்த நாட்களில் எமது மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் அவலக் குரல் எழுப்பினார்கள். இரத்தமும் சதையுமாக சிவப்பு நிலமாக மாறிக்கொண்டிருந்த தாய் நிலத்திலிருந்தும் புலம்பெயர்ந்த நிலத்திலிருந்தும் தாய் தமிழகத்திலிருந்தும் எத்தனை விதமாக இன அழிப்பு யுத்தத்தை நிறுத்தும்படி எமது மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். தங்களை எரித்து சாம்பாலாக்கியபடி கோரிக்கை வைத்தார்கள். உண்ணா விரதம் இருந்தார்கள். தெருக்களில் இறக்கி மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். எல்லோருக்கும் அறிக்கை கொடுத்தார்கள். கடிதம் எழுதினார்கள். காயப்பட்டு குற்றியிராகக் கிடந்து கொண்டு பலர் அழுதழுது கேட்டார்கள். காப்பாற்றுங்கள் என்று. யார் வந்தார்கள் எங்களை காப்பாற்றுவதற்கு? இந்தியா இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்த நிலங்களைப் பார்வையிட வந்தது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பேதமற்ற வகையில் ஒழிக்கப்பட்டார்கள். குறிப்பிட்ட நிலப் பகுதி ஒன்றுக்குள் பல லட்சம் மக்கள் குவிந்து தவித்தார்கள். பாதுகாப்பு வலயங்கள் என்று அறிவிக்கப்பட்டு யுத்த வலயங்களாக்கப்பட்டன. உணவில்லை, மருந்தில்லை, இருக்க இடமில்லை என்று அலைந்தார்கள். பதுங்குகுழிகளை வெட்டிக் களைத்துப் போய் ஓடினார்கள். உறவுகளை பலிகொடுத்து உறவுகளை தொலைத்து அலைந்தார்கள். யாருக்குக் கேட்கவில்லை இந்த மக்களின் அவலக்குரல். உலகமெங்கும் பெரும் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளின் கதறல் நிலத்திற்கடியிலிருந்து ஒலித்தது. இரத்தம் முகங்களில் வழியும் மக்களின் குரல் ஒலித்தது. ஈழத் தமிழ் மக்கள் மீது இரக்கமற்ற வகையில் போரை தொடர்ந்து திணித்து சிங்கள மேலாதிக்கத்தை அரசாங்கம் நிலை நிறுத்த கொன்றழித்த மக்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது?
போராளிகள் மீது உலகமே இணைந்து யுத்தத்தை தொடுத்து அவர்களை நிலை குலைய வைத்தது. சரணடையுங்கள் என்று சொல்லி நிராயுதபாணிகளை கொன்றழித்தார்கள். பெண் போராளிகளை புணர்ந்து கொன்றார்கள். போராளிகளை, சிறுவர்களை, பெண்களை சித்திரவதை செய்தார்கள். எத்தனை போரை முகவரி தெரியாமல் புதைத்து விட்டார்கள்? இந்தக் கணக்குகளுக்கு எல்லாம் என்ன தீர்வு? யார் அதை தரப் போகிறார்கள்? யுத்தகளத்தில் போராளிகளை வெள்ளைக் கொடி ஏந்தியவாறு வரச் சொல்லி அறிவிக்கப்பட்டு சரணடைந்தவர்கள் கொன்றழிக்கப்பட்ட இரகசியங்கள் இன்னும் அம்பலமாகின்றன. பலர் இன்று வரை காணாமல் போயிருக்கிறார்கள். என்ன நடந்தது என்ற தகவல் தெரியாது உறவுகள் அலைகின்றார்கள்.
வன்னிப் போரின் இறுதி நாட்களில் இறுதி யுத்த களம் சிறிய மைதானமாகிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை கோரி யுத்தத்தை நிறுத்தி சரணடைய விரும்பினார்கள். எஞ்சிய மக்களை காப்பாற்ற அவலக் குலர் எழுப்பினார்கள். ஆனால் இறுதி வரை யுத்தமாடி மக்களையும் போராளிகளையும் கொன்று மாபெரும் யுத்த வெற்றி ஒன்றை அறிவிக்க அரசாங்கம் விடாப்படியாய் நின்றது. இறுதி நாட்களில் கட்டம் கட்டமாக கொல்லப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்து. சிங்கள மக்களிடத்தில் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் அரசியலாகி களிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களின் வீழ்ச்சியையும் தமிழர் நிலத்தின் வீழ்ச்சியையும் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
வன்னி யுத்தகளம் என்பது போர்க்குற்றங்கள் நிறைந்த களமாகி குரூரமானது. இரக்கமற்ற வகையில் இலங்கை இராணுவப் படைகள் தமிழ் மக்களையும் போராளிகளையும் கொன்றது. கொல்லப்பட்ட பிணங்களையும் கிழித்து மகிழ்ந்தது. காயங்களை கடித்து சுவைத்தது. யுத்த தர்மங்களை மீறி, வெளிப்படையான பிரச்சாரங்களை மீறி மிக இரகசியமாக இலங்கை இராணுவப் படைகள் தமது ஜனாதிபதியின் அனுமதியில் தமது தளபதிகளின் கட்டளையில் பல்லாயிரம் ஈழத்து மக்களை கொன்றழித்த களமாகி இரத்தம் நனைந்த நாட்களாய் கொதிக்கின்றன. சுற்றிச் சுற்றி அப்பாவி மக்களையும் மாபெரும் போராட்டத்தையும் மிகக் கொடூரமாக கொன்றழித்த களம் என்கிற மறக்க முடியாத துயரத்தை தந்திருக்கிறது.
சங்ககாலப் போரை படித்திருக்கிறோம். சோழர்களின் போரை படித்திருக்கிறோம். முதலாம், இரண்டாம் உலகப் போரைப் பற்றி புகைப்படங்களில் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். போராடத் தொடங்கிய காலம் முதல் விமானங்களும் குண்டுகளும் துப்பாக்கிகளும் இராணுவ வண்டிகளும் ஈழத் தமிழர்களின் வாழக்கையை அச்சுறுத்தி வந்திருக்கின்றன.
ஆனால் எல்லோரும் பார்த்திருக்க யுத்த பேரூழி எங்கள் மண்ணில் நடந்தது. சிங்கள அரசு நிகழ்த்திய போரை ஈழத்து மக்கள் கடந்திருக்கிறார்கள். ஊழிப் பேரழிவு எங்கள் மண்ணில் நடந்தது. ஈழத் தமிழர்களின் நெஞ்சில் மே மாதம் பொறுக்க முடியாத சோகத்தை, அரசியல் வெறுமையை, வரலாற்றுத் துயரத்தை வழங்கிய நாட்களாகவும காலமாகவும் இடராகிறது. ஈழ துக்க தினமான இந்த நாட்கள் உலகத் தமிழர்கள் அனைவரிடத்திலும் நடந்த யுத்தப் பேரூழிக்கு எதிரான போராட்டத்தையும் ஊழிப் பேரழிவில் இறந்தவர்களுக்கு என்ன அஞ்சலி செய்ய வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தி நிற்கின்றன.
கிளிநொச்சியிலிருந்து கபிலன்
2009 மே மாதம் இறுதி நாட்கள் - பேரூழிப் பேரழிவு நடந்து இரண்டாண்டாகிறது
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2011



0 Responses to 2009 மே மாதம் இறுதி நாட்கள் - பேரூழிப் பேரழிவு நடந்து இரண்டாண்டாகிறது