ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு சட்டவலுக் கிடையாது என்ற வாதத்தை முன்வைத்து சிறிலங்கா அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.அதாவது பான் கீ மூன் என்ற தனிநபரின் விருப்பின்பேரில் அமைக்கப்பட்ட, மூன்று பேரினது அறிக்கையே இது என்ற வகையில் தான், சிறிலங்கா அரசின் பிரசாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது சிறிலங்கா அரசு இதை “தருஸ்மன் குழு“வின் அறிக்கை என்றே அழுத்தமாகக் குறிப்பிட்டு வருகிறது.
மர்சுகி தருஸ்மன் என்பவர் தான் இந்தக் குழுவின் தலைவர்.
தருஸ்மன் குழு எல்லை மீறிச் சென்று விட்டது- ஐ.நாவின் சாசனங்களை மீறிவிட்டது என்றெல்லாம் தலைதெறிக்கப் பேசுகின்றனர் சிறிலங்காவின் அமைச்சர்கள்.
சிங்கள மக்களை உசுப்பி விட்டு, அரசியல் இலாபம் தேடுவதற்கும், குளிர்காய்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தாராளமாகவே இதுபோன்ற கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால், உண்மையில் இந்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு சட்டஅங்கீகாரம் இல்லையா? என்ற கேள்வி எம்மவர் பலரிடம் உள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்த போது அதைப் பார்த்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
இப்படியொரு வரலாற்று ஆவணத்தை தமிழர் தரப்பு இதுவரை தயாரிக்கவில்லை என்பதே அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம்.
அதுமட்டுமன்றி இதுபோன்ற ஆவணத்தை தமிழர் தரப்பினால் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆவணம் தமிழர் தரப்புக்கு முற்றிலும் சார்பானதாக இல்லாது போனாலும், உலகளவில் தமிழினப் படுகொலைகளை வரலாற்று ரீதியாகப் பதிவு செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போது சிங்கள அரசுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் எதுவென்றால், இந்த அறிக்கையால் ஏற்படக் கூடிய நேரடி விளைவுகள் அல்ல.
அதற்குப் பல படிமுறைகளை ஐ.நா தாண்ட வேண்டும் என்பதும், அதற்குள் தம்மால் எப்படியோ தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் சிங்கள அரசுக்கு நன்றாகவே தெரியும்.
அதுவல்ல அவர்களின் பிரச்சினை.
தமிழர்களின் படுகொலையை வெளிப்படுத்தும் ஒரு ஐ.நாவின் ஆவணம் பதிவாகி விட்டது என்பதே அவர்களின் இப்போதைய பிரதான கவலையாக உள்ளது.
இதுவரை தமிழரின் இனப்படுகொலைகள் எல்லாமே பத்திரிகைகளிலும், நூல்களிலும் தான் ஆவணமாகியுள்ளன.
அதற்கு அப்பால் எந்த ஆவணங்களும் கிடையாது.
ஆனால் இது ஐ.நாவின் ஆவணமாக ஐ.நா பொதுச்செயலர் கையெழுத்திட்டு வெளிவந்துள்ளது. இது இந்த அறிக்கையின் பெறுமதியை- கனதியை அதிகரிக்கச் செய்துள்ளது.
என்னதான் சிங்கள அரசு இது பக்கச்சார்பானது என்றும், குறைபாடுகளைக் கொண்டது என்றும் வாதிட்டாலும், ஐ.நாவும் உலகமும் உள்ள வரை இந்த ஆவணத்துக்கு அழிவேதும் நிகழப் போவதில்லை.
இந்த அறிக்கையை வைத்து சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டாலும் சரி, விசாரிக்கப்படாது போனாலும் சரி, தமிழர் தரப்புக்கு நன்மையே.
அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட்டால் சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் அம்பலத்துக்கு வரப் போவது நிச்சயம்.
அதுபோல அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படாது போனால், தமிழர் தரப்புக்கு இன்னமும் வசதியாகி விடும்.
ஏனென்றால், இந்த அறிக்கையும் இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் மாற்றமின்றி இருக்கப் போகிறது.
போர்க்கற்ற விசாரணைகள் நடத்தப்பட்டா சிங்கள அரசு சில தம் மீதான குற்றச்சாட்டுகளை பொய்ச்சாட்சியங்கள் மூலம் வலுவற்றதாக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் விசாரணைகள் ஏதும் நடத்தப்படாது போனால் அதற்கெல்லாம் வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்காது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படாமல், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காது போனாலும், என்றோ ஒரு நாளில் இந்த ஆவணம் உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுதான் சிங்கள அரசுக்கு முக்கியமான பிரச்சினை.
இதனால் தான் ஐ.நா பொதுச்செயலருக்கு நிபுணர்குழுவை அமைக்க அதிகாரம் கிடையாது என்றும், அதன் அறிக்கைக்கு ஐ.நாவின் சட்டஅங்கீகாரம் கிடையாது என்றும் சிங்கள அரசு கூறுகிறது.
ஆனால், பான் கீ மூன் என்பவர் தனியொரு நபர் அல்ல.
அது போலவே தருஸ்மன் குழு என்பதும் மூன்று தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட குழுவல்ல.
பான் கீ மூன் ஐ.நாவின் பொதுச்செயலராக இருப்பவர். அவர் நியமித்த நிபுணர் குழுவும் ஐ.நாவின் அடையாளத்துடனேயே செயற்பட்டது.
அதுமட்டுமன்றி ஐ,நாவின் ஒரு அங்கமாகவே, இந்த நிபுணர்குழுவுக்கு சிறிலங்கா அரசு அங்கீகாரமும் அளித்திருந்தது.
என்னதான் அது வெளியே இந்த நிபுணர்குழுவை ஏற்கவில்லை என்று நிராகரித்தாலும், உள்ளுக்குள் அது நிபுணர்குழுவுடன் கலந்துரையாடியதும் விருந்து வைத்து விளக்கம் கொடுத்ததும் உண்மை.
இதையெல்லாம் நிபுணர்குழு ஆதாரங்களுடன் தமது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா நிபுணர்குழுவை தனது வீட்டுக்கு அழைத்து மதிய விருந்து கொடுத்து தமது பக்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் சிறிலங்காவின ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன.
தனிநபர்கள் குழுவை எதற்காக பாலித கொஹன்ன தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டும்?
அப்போதெல்லாம் சிங்கள அரசுக்கு ஐ.நாவின் நிபுணர் குழுவாகவே அது தெரிந்தது.
அதன் அறிக்கை தமக்குச் சார்பாக இல்லை என்றதும் சிறிலங்கா அரசு இதை இது தருஸ்மன் குழு என்கிறது.
இந்த ஆலோசனையை ரணில் தான் கூறியதாகவும் கதை அடிபடுகிறது.
யார் ஆலோசனை கூறினாலும், சிறிலங்கா அரசு தனது ஆவணங்களில் இதை ஐ.நாவின் குழு என்று ஏற்றுக் கொண்டு விட்டு, பின்னர் அதை தனிநபர்குழு என்று கூறுவதை எந்த உலக நாடு தான் ஏற்கப் போகிறது?
எந்தச் சட்டம் தான் ஆமோதிக்கப் போகிறது.?
ஐ.நா பொதுச்செயலர் கையெழுத்திட்ட ஆவணம் அவர் பதவியில் இருக்கும் வரை ஐ.நாவின் ஆவணம் தான்.
அதற்குரிய சட்ட அங்கீகாரம் அவர் தெரிவு செய்யப்பட்டதுமே வந்து விடும்.
இதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரியாது என்பது போல, சிங்கள அரசின் அமைச்சர்கள் எதையெதையோ எல்லாம் புலம்பித் திரிகிறார்கள்.
இந்த ஆவணத்தை வெளியிடுவது வரை ஐ.நா பொதுச்செயலர் போய்விட்டார்.
ஆனால் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவருக்கு அதிகாரங்கள் இல்லை என்பதே உண்மை.
இங்கே தான் சிங்கள அரசுக்கு சார்பான நிலை ஒன்று காணப்படுகிறது.
ஆனாலும் அதிலும் கூட சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.
அதாவது சிங்கள அரசுக்கு எதிராக இப்போது மேற்குலக சக்திகள் திரும்பியுள்ளன.
மேற்குலக சக்திகளின் எதிர்நிலைப்பாடு இருக்கும் வரைக்கும் சிங்கள அரசுக்கு நெருக்கடிகள் நீடிக்கவே போகின்றன.
நிபணர்குழுவின் அறிக்கைக்கு சட்டஅங்கீகாரம் கிடையாது- இதை வைத்து தம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கும் சிங்கள அரசு, இதற்கெல்லாம் பயப்படாது போனால் எதற்காக அலறிக் கொண்டு உலகம் எங்கு ஓடுகிறது?
இந்தியாவை துணைக்கு அழைப்பது ஏன்?
ரஸ்யா, சீனாவின் காலில் வீழ்வது ஏன்?
மாலைதீவு, ஓமான் போன்ற சிறிய நாடுகளைக் கூட விட்டு வைக்காமல் ஆதரவு தேடுவது ஏன்?
இந்த அறிக்கையை வைத்து தம்மை எதுவும் செய்து விட முடியாது என்று சிங்கள வெளிப்படையாக கூறிக் கொண்டாலும்- அதற்கு இதன் கன பரிமாணம் நிச்சயம் தெரியாமல் இல்லை.
அதனால் தான், ஓடி ஓடி ஆதரவு தேடுகிறது.
நிரந்தரமாக இந்த அறிக்கையின் நாமம் அழிக்கப்படும் வரை சிங்கள அரசின் இந்த ஓட்டம் ஓயப் போவதில்லை.
அதற்கு ஈடாக தமிழர் தரப்பும் ஓட வேண்டும்.
அப்போது தான் இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு தமிழருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் நியாயம் பெறமுடியும்.
முகிலன்
ஈழநேசன்



0 Responses to எதற்காக ஓடுகிறது சிங்கள அரசு?