நன்றாக வாழ்ந்தகுடி நாடற்ற சிங்களர்கள்
சென்றங்கு சேர்ந்ததனால் சீரிழந்தார் –இன்றளவும்
கன்னித் தமிழினம் கண்ணீர் வடிக்கிறதே!
எண்ணிமுன் னேறும்நாள் என்று? (101)
எண்ணித் துணிந்தாய்! எடுத்தடி வைத்துவிட்டாய்!
திண்ணிய போர்மரபைத் தேர்ந்தீழ –மண்ணில்
கடற்படையும் வான்படையும் கட்டி எழுப்பித்
தடையகற்றி ஆண்டுவந் தாய்! (102)
தாயானாய் தந்தையும் தானானாய் மூத்தோர்க்குச்
சேயானாய்; பாவலர்க்குப் பாப்பொருள் –நீயானாய்;
பட்டினி பஞ்சத்தைப் பார்த்தகற்றிப் பார்புகழ
விட்டினி(து) ஆண்டாய் விழைந்து! (103)
விழைந்து* கொடுத்திடினும் வெல்ஈழ நாட்டில்
குழைந்து பெறுவார் இலரே! –உழைத்துப்
பெறுவார் பொருளன்றிப் பின்சென்றால் ஐயம்*
தருவார் எனவிழையா தார்! (104)
விழைதல் –விரும்புதல்; ஐயம் –பிச்சை.
தாங்கிப் பிடிக்க தலைவன்நீ உள்ளதனால்
ஏங்கித் தவிப்பார் எவருமில்லை; -ஆங்கெவரும்
ஐயம் இடுவதில்லை; அண்டிப் பெறுவதில்லை;
கையிரண்டை நம்பியதால் காண்! (105)
கண்டு வியந்தேற்றும் காசுள்ள நாடுகளும்
கொண்டால் இவன்போல் கொளவேண்டும் –மன்னனென
ஏற்றும் பலஇனமும், ஏக்கமுறும் சிங்களமும்
மாற்றம் நிகழ்த்தியநீ மன்!* (106)
மன் –மன்னன்.
மன்னே! மறனே! மருள்நீக்கும் மாமதியே!
அன்னே!* எமைக்காத்(து) அருள்வோனே! –உன்னால்
அறனும், அறிவும், அருள்மிகும் அன்பும்,
மறனும் வளர்த்தோம் மனத்து! (107)
அன்னே –அத்தகையவனே.
மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (108)
இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (109)
தியங்குதல் –கலங்குதல்.
கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (110)
கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து
- அகரம் அமுதா



0 Responses to கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 11