தமிழ் நாட்டில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் அல்லல்படுகின்ற ஈழத் தமிழர்களைக் கைவிடமாட்டார் என நம்புகின்றோம். இவ்வாறு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கல்லடி - நொச்சிமுனை காந்தி சமுர்த்தி சங்கத்தின் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வு நேற்று காலை (14.05.2011) இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக அனேகமான பெற்றார் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் இருக்கின்றார்கள். இந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் பல அமைப்புகள் எமது மாணவர்களின் கல்வி விருத்திக்கு பெரிதும் உதவி புரிகின்றன.
அந்த வகையில் கனடாவில் உள்ள “அன்புக் கரங்கள்” என்ற அமைப்பும் இவ்வாறான உதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக வழங்குகின்றது இதை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்தி பூரண பயனை அடைய வேண்டும்.
அத்துடன் எமது மாவட்டத்தில் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி கல்வியை மழுங்கடிக்கும் முகமாக சில தீய சக்திகளின் திட்டமிட்ட செயற்பாட்டால் தேவைக்கு அதிகமான முறையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் எமது எதிர்கால சந்ததியினரை இதில் இருந்து காப்பாற்றவேண்டும்.
மேலும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இதுவரை 6 தடவைகள் 5 மணித்தியாலங்களாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது. ஆனால் கூட்டமைப்பின் எந்த விடயத்தையும் அரசு ஏற்றுக்கொண்டு செயற்படுத்தவில்லை.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்றனர். இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் அல்லல்படுகின்ற ஈழத் தமிழர்களைக் கைவிடமாட்டார் என நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காந்தி சமுர்த்தி சங்கத் தலைவி சோதிமலர் சமுர்த்தி உத்தியோகத்தர்களான எஸ் உமாபதி எம் செயித்து உம்மா மாதர் சங்க பொருளாளர் திருமதி வேவி கோபாலபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.



0 Responses to அல்லல்படுகின்ற ஈழத் தமிழர்களை முதலமைச்சர் ஜெயலலிதா கைவிடமாட்டார்