Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி Düsseldorf நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வும் கண்டனப் பேரணியும்.

முள்ளிவாய்க்காலில் வைத்து எமது இனம் கருவறுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கமும் யேர்மனி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மனிதநேய தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை விலக்கிக் கொண்டு விடுதலை செய்யக் கோரியும் பேரெழுச்சியுடன் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அத்துடன் போர்க் குற்றநாள் மே-18 ஐ வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்டனப் பேரணியும் நினைவு வணக்க நிகழ்வும் யேர்மனி Düsseldorf நகரில் பல்லாயிரக்கணக்கிலான புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களது பங்கேற்புடனும் மானுட நேயத்தை போற்றும் வேற்றினத்தவர்களது ஒத்துழைப்புடனும் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முன்னதாக கண்டனப் பேரணியானது Düsseldorf மாநகர தொடரூந்து நிலையத்தின் முன் இருந்து மதியம் இரண்டு மணியளவில் ஆரம்பமாகியது. நிகழ்விடமான Düsseldorf பாராளுமன்ற முன்றலை நோக்கி புறப்பட்ட பேரணியானது வழமையாக அனுமதிக்கப்படும் பாதையை விடுத்து நகரின் முக்கிய சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

பல மணிநேரப் பயணத்தை மேற்கொண்டு எம் சொந்தங்களிற்கு வணக்கம் செலுத்த திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கிலான யேர்மனி வாழ் தாயக மக்கள் வாயில் கறுப்பு துணியை கட்டிக் கொண்டு அமைதியான முறையில் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் இரண்டு கிலோமீட்டரிற்கும் அதிகமான நீளத்திற்கு பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தனர். இப் பேரணி நகர்ந்து சென்ற பாதையானது மிகவும் நெரிசல் நிறைந்த பலபேர் வந்து செல்லும் இடமாக இருந்தமை எமது உள்ளக் குமுறல்களை அவர்களிடமும் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் பேரணியின் முன்னால் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவாறு டொச் மொழியில் ஏன் இந்த கண்டன ஆர்பாட்ட பேரணி எம்மால் நடத்தப் படுகின்றது என்பதனை ஒலிபெருக்கி மூலமாக தெரிவித்துக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த பேரணியில் இடம்பெற்றிருந்தவர்கள் சிறிலங்கா அரசின் போர்குற்றங்களை சித்தரிக்கும் பதாதைகளை தாங்கியவாறும் நகர்ந்து சென்றனர். அதிலும் குறிப்பாக யேர்மனிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெகத் டயசுக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறும் வந்தனர்.

டொச் மொழியில் தயாரிக்கப்பட்ட சிங்கள அரசின் போர்குற்றங்களை வெளிப்டுத்தும் விதமான துண்டுப் பிரசுரங்களை யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டது.

பேரணியில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களால் ஈர்க்கப்பட்ட யேர்மனியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் Düsseldorf பாராளுமன்ற முன்றலிற்கு வருகை தந்து எமது சொந்தங்ளின் நினைவு வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தேசியக்கொடி ஏற்ரலுடன் வணக்கநிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு பொதுச்சுடர் மற்றும் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செய்யப்பட்டது .

எம் சுதந்திரத்துக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் மக்களையும் நெஞ்சில் தாங்கி தலை குனிந்து அஞ்சலி செலுத்தி மறுகணம் அவர்கள் எதுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ அந்த உயர்ந்த கொள்கைக்காக தலை நிமிர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவல்ல என பல பேச்சாளர்கள் தங்கள் உரையை மக்களுடன் பகிர்ந்தார்கள்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை எம்மானுவேல் அவர்கள் தனது உரையில் தற்போது உலக வல்லரசு நாடுகள் எப்படி தமது பார்வையை தமிழர்கள் மீது கொண்டுள்ளார்கள் என்பதையும் அத்தோடு ஐ நாவின் அறிக்கை தற்போதைய காலத்துக்கு தமிழர்களுக்கு கிடைத்த பெரிய சந்தர்ப்பம் அதை நாம் சரியான முறையில் பாவித்து எமக்கான நீதியை உலக நாடுகளிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அத்தோடு நாம் பல்வேறு அமைப்புகள் ஊடாக எம் தேசத்துக்கு சேவை செய்தாலும் அடிப்படையில் அனைவரும் நாம் ஒன்றுபட்ட கொள்கையில் இணைந்து தாகத்தில் துன்பத்தில் துடிக்கும் எம் உறவுகளுக்கு கரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் .

தொடர்ந்து ஆயுத எழுத்து பத்திரிகையின் உதவி ஆசிரியர் கனகரவி அவர்கள் தனது உரையில் புலம்பெயர் மக்கள் எத்தனை இடையூறுகள் ஏற்படினும் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அத்தோடு இப் போராட்டம் எத்தனை காலங்கள் சென்றாலும் எத்தனை துயரங்கள் ஏற்படினும் நிச்சயமாக ஒரு நாள் வெல்லும் எனவும் , தொடர்ந்து புலம்பெயர் மண்ணிலே எமது பிள்ளைகள் இளையோர்கள் ஆர்வமாக தாய் நாட்டுக்கு அயராது உழைக்க துணிந்து முன்வர வேண்டும் என்றும் கூறினார் .

அத்தோடு இவ் நிகழ்வில் சிறப்பாக பல்லின இனத்தவர்களின் உரைகளும் இடம்பெற்றது .Sozialistische Linke , Dersim Förderation Europa , Förderation Kurdischer Vereine Deutschland , Rechtshilfefonds Azadi , Rote Hilfe ,Die Linken என பல அமைப்புகளும் அரசியல்/ சட்டம் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை தாம் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்றும் அத்தோடு யேர்மனியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மனிதநேய தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் தாம் குரல் கொடுப்பார்கள் என உறுதியளித்தார்கள்.

யேர்மன், பெர்லின் மக்கள் பிரதிநிதி வித்தியா ஜெயசங்கர் டொச் மொழியில் தனது உரையில் "முள்ளிவாய்க்காலின் செய்தி" எனும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நாட்களை ஏன் நாம் நினைவு கொள்ள வேண்டும் என்ற கேள்வியோடு கருத்துகளை முன்வைத்தார்

பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல,
எந்த ஒரு தமிழனும் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல,
உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்துக்கான பயணத்தில் எந்த ஒரு பாரிய அழிவு ஏற்பட்டாலும் அவர்கள் தமது கொள்கையை சாக விட மாட்டார்கள் என்பதுக்கான சாட்சியே "முள்ளிவாய்க்கால்".

முள்ளிவாய்க்கால் எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியை அடையாளப்படுத்துகின்றது . முள்ளிவாய்க்கால் எமக்கு சிங்கள இனவெறி அரசின் இராணுவ பலத்தை காட்டவில்லை ., மாறாக எமது மக்களின் அசைக்கமுடியாத தார்மீக நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது .

அவர்களின் சுதந்திரத்துக்கான கொள்கையை அங்கு தங்கள் உயிர்களை அதற்காக அர்ப்பணித்தவர்கள் வகுத்தார்கள் .உயிரோடு வாழும் நாம் அல்ல .

உயிரோடு வாழும் எமக்கு அந்த கொள்கையை மாற்றவோ அல்லது புதிதாக வகுக்கவோ அதிகாரம் அல்ல . முள்ளிவாய்க்காலில் அவர்கள் நினைத்திருந்தால் அனைவரும் உயிர் வாழ்ந்திருக்கலாம், ஆனால் கொள்கை இறந்திருக்கும் அத்தோடு தமிழினம் அடியோடு அழிக்கப்பட்டிருக்கும்.ஆனால் அவர்கள் மாறாக தமது உயிர்களை கொடுத்து தமிழினத்தின் கொள்கையை வாழ வைத்தார்கள். இது தான் எமக்கான முள்ளிவாய்க்காலின் செய்தி என அவர் கூறினார் .

தொடர்ந்து பல இளையோர்களின் பேச்சுக்களும் எழுட்சி கவிதைகளும் இடம் பெற்றது .இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்தோடு இவ் நிகழ்வு நிறைவுபெற்றது.

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வும் கண்டனப் பேரணியும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com