இந்த அறிக்கை பொது மக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படும் எனக்கூறப்பட்டு வந்தது. ஆனால், சிறீலங்காவிடம் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை பொது மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற முடிவை ஐ.நா எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது.சிலவேளைகளில்இவ் அறிக்கைபகிரங்கப்படுத்தப்படாமல் விடுபட்டும் போகலாம் எனவும் ஐ.நாவின் இன்னர்சிற்றி பிரஸ் ஊடகமும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்த அறிக்கை வெளிவருவதைத் தடுப்பதற்கு சிறீலங்கா தனது அனைத்து வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது. குறைந்தது அது வெளிவருவதற்கு முன்பாக அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை என்றாலும் அறிந்துகொள்வதற்கு பல்வேறு முயற்சிகளையும் அது கையாண்டது. இதற்காக பான் கீ மூனை இரகசியமாகச்சந்தித்தும் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், அவற்றை எல்லாம் மீறி நிபுணர்குழுவின் அறிக்கை சிறீலங்கா அறிந்து கொள்வதற்கு முன்பாகவே ஐ.நா வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இனி அறிக்கை மீதான நடவடிக்கையை ஐ.நா எடுக்கவேண்டியுள்ளதுதான் பாக்கி. அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு, அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அறிக்கையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது தெரியவராதபோதும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை இப்போது அறிந்துகொண்டுள்ள சிறீலங்கா, தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரிக்கத்தொடங்கியுள்ளது. சிறீலங்காதுள்ளுகின்ற துள்ளல்களில் இருந்து, மகிந்த அரசின் மீதான குற்றச்சாட்டுக்கள் இதில் அதிகமாக இருக்கின்றன என்பது வெளிப்படையாகின்றது.
எனினும், சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை, பொது மக்களின் பார்வைக்கு வெளியிடாமல் அதில் மாற்றங்கள் செய்யப்படுமாக இருந்தால் பலத்த சந்தேகங்களையே அது தோற்றுவிக்கும். ஏற்கனவே, இந்த இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் மெத்தனப் போக்கைக்கடைப் பிடித்ததாகவும், இந்தியாவின் விஜய் நம்பியார் போன்றவர்களினது அழுத்தங்களால் இன அழிப்பு வெளிப்படையாக நடந்துகொண்டிருந்த போதும் அதனை இறுதிவரை தடுத்து நிறுத்த முனையவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனாலேயே, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச மன்னிப்புச்சபை உட்படப் பல மனித உரிமை அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் இந்த அறிக்கையை உடனடியாக (மாற்றங்கள் செய்வதற்கு முன்பாக) பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்திவருகின்றன.
இந்த அறிக்கையை வெளியிட வைக்கவேண்டிய நிர்ப்பந்தங்களை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் இப்போது புலம்பெயர்ந்த மக்களுக்கு எழுந்துள்ளது. ஐ.நா நிபுணர்குழுவிடம் பல்வேறு இனப்படுகொலை ஆதாரங்களும் சென்றடைவதற்கு வழிவகுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் உடனடியாக விரைந்து மேற்கொள்ளவேண்டியது இந்த அறிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு முன்பாக பொது மக்களின் பார்வைக்கு அதனை வெளிக்கொண்டுவர வைப்பதே.
இந்த அறிக்கையை வெளிக்கொண்டுவருவதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியது இன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்னுள்ளஉடனடியான அவசிய தேவையாகின்றது.
ஈழமுரசு



0 Responses to ஐ.நா அறிக்கையை வெளிக்கொணர அழுத்தங்கள் தேவை