சேர்பிய போர்க் குற்றவாளி றற்கோ மிலடிக்கை ஒல்லாந்து ஹேக் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றோ அல்லது நாளையோ அவர் ஒல்லாந்திற்கு நாடு கடத்தப்படலாம். ஒல்லாந்து சென்றதும் இவர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் மின்னல் வேகத்தில் முடுக்கிவிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இவரை நாடு கடத்தல் கூடாது என்று ஊர்வலம் போனவர்கள் நேற்று நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியை ரசிப்பதில் ஈடுபட்டதாகவும் அங்குள்ள செய்தியாளர் தெரிவிக்கிறார். சில ஆயிரம்பேரே இவருக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. மிலடிக் மிகவும் உடல் பலவீனமாக இருக்கிறார், அவரை நாடு கடத்தக்கூடாது என்று குடும்பத்தின் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. ஆனால் இவர் மற்றவர்களைவிட தெளிவாக இருப்பதாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன.
இது இவ்விதமிருக்க கடந்த 16 வருட காலமாக இவர் தலைமறைவாக வாழ்ந்தது எப்படி..? முன்னாள் அதிபர் மிலோசெவிச் ஆட்சி 2004 வரை இவருக்கு பாதுகாப்பு வழங்கியது. அதற்குப் பிறகு இவருடைய பாரிய குடும்பத்தினர் இவரை மறைத்து வைத்திருந்தாக சந்தேகிக்கப்படுகிறது. பொறிஸ் ராடிக் தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இவர் உண்மையாகவே தேடப்பட்டுவந்தார். இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளாக இவரை மறைத்து வைத்திருந்த அத்தனைபேரும் போர்க்குற்ற பின்னணியிலான விசாரணைகளை சந்திக்கவுள்ளதாக பொறிஸ் ராடிக் நேற்று தெரிவித்தார். போர்க்குற்றவாளிகளுக்கு உதவுவதும், அவர்களுக்கு புகலிடம் வழங்குவதும், அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதும் குற்றச் செயல் என்பதை இந்த நிகழ்வு தெட்டத் தெளிவாக கோடு போட்டுள்ளது.



0 Responses to போர்க் குற்றவாளிக்கு உதவுவோரும் குற்றவாளிகளே