இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர் குழுவினால் முன்கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கவனத்தில் எடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கை பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் எலின் சம்பர்லைய்ன் டொனாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்களை எந்தத் தரப்பு செய்தது என்று கவனத்தில் கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் உடனடியாக நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
இத் தீவிர துஷ்பிரயோகங்கள் குறித்து இந்த பேரவை கருத்திற் கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் ஆராய வேண்டும்.
பாகிஸ்தான் கருத்து
இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் தூதுவர்சமீர் அக்ரம் தேசிய நகர்வுகள் மூலம் இலங்கையில் அமைதியை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகமும் உதவ வேண்டும்.
இதேவேளை ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இரண்டாம் தரப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஆரம்பநிலை அறிக்கை என்றும் பகுப்பாய்வு செய்யப்படாததும் என்றார்.
இதேவேளை இந்த கூட்டத்தொடர்பில் ஆபிரிக்க மற்றும் இஸ்லாமிய நாடுகள் இலங்கை யுத்தம் தொடர்பான விவாதத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
போர்க் குற்றங்கள் நடந்தது உண்மை; சனல் 4 வீடியோ ஆதாரத்தில் சந்தேகமில்லை என்கிறது ஐ.நா.
இலங்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபையில் நேற்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ காட்சிகள் உண்மையானவை, நம்பத்தகுந்தவை என்று மனித உரிமைகள் நிபுணர்கள் அடித்துக்கூறியிருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 17ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தின் முதலாவது நாளிலேயே இலங்கை விவகாரமும் எடுக்கப்பட்டது.நீதிக்குப் புறம் பான கொலைகள் மற்றும் படு கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன விசாரணையாளர் கிறிஸ்டோவ் கென்ஸ் தனது 482 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார். சனல்4 வீடியோ காட்சிகள் உண்மையானவை என்று அந்த அறிக்கையில் ஐயந்திரிபுரத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் 59 பக்கங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் உண்மையற்றவை; புனையப்பட்டவை என்று இலங்கை அரச அடியோடு மறுத்திருந்த நிலையில், அது சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் உண்மையானது என்று ஐ.நா. விசாரணையாளர் தெரிவித்துள்ளார். இந்த 5 நிமிட வீடியோ, முன்னர், பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவைவிடப் புதிதானது. இலங்கையில் மிகப் பாரதூரமான குற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது. அவை போர்க் குற்றங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சட்டப் பேராசிரியரான கிறிஸ்டோவ் கென்ஸ்.
தொழில்நுட்ப ரீதியாகவும் தடயவியல் ரீதியாகவும் துறை சார் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த வீடியோ உண்மையானது, நம்பகமானது. அங்கு என்ன நடந்தது என்பதை அதிலுள்ள காட்சிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன என்று மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகின்றது. அந்த வீடியோவில் காணப்படும் சிலரின் முகங்கள் மிகத் தெளிவாகத் தெரிவதால் அவர்களை இனங்காண்பது இலங்கை அரசுக்கு அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல என்றும்
இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்காகவும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச விசாரணை ஒன்று தேவையான அதிகாரங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கை கூறுகின்றது.இந்த குற்றங்களில் இலங்கை அரசோ அல்லது அதன் பகுதிகளோ குற்றவாளிகள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. அது நீதிமன்றச் சட்டங்களின் மூலம் மட்டுமே நிரூபிக்கப்பட முடியும். இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் பாரதூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது. இதனையும் இன்னும் கிடைக்கக்கூடிய ஆதரங்களையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் விசாரணையாளர்களால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேசமயத்தில் இதற்குப் பொறுப்பானவர்களைத் தேடிக் கண்டறியும் தெளிவான நோக்கத்தோடு சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.



0 Responses to பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்து