தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.இது தொடர்பாகக் கனடியத் தமிழர் பேரவை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழக முதல்வராகப் பதவியேற்கும் மேதகு செல்வி ஜெயலலிதாவை கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது
தமிழ்நாடு தேர்தலில் அமோக வெற்றியீட்டி, பதவியேற்கும் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களையும் அவரது அரசையும் கனடியத் தமிழர் பேரவை மனதார வாழ்த்துகிறது.
தமிழக மக்களின் பெரும்பான்மை ஜனநாயக ஆணையைப் பெற்றபின் தாங்கள் கொடுத்த செவ்வியில் ஈழத் தமிழினத்துக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை ஒன்றுக்கு ஓங்கிக் குரல் கொடுப்பேன் என்று சொன்னது வேதனையில் வாடும் ஈழத் தமிழர்களின் உள்ளங்களை மட்டுமன்றி, அவர்களது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களின் இதயங்களையும் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் இதமாக வருடிக்கொடுத்துள்ளதுடன் எங்களுக்கு ஆறுதலையும் வலுவான நம்பிக்கையையும் தர்மத்திற்கான நியாயமான எதிர்பார்ப்புக்களையும் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றமே பரிந்துரைத்துள்ள மேற்படி போரக்குற்ற விசாரனையைத் துரிதப்படுத்தும் சர்வதேச தமிழர் முயற்சிக்குத் தங்களது அரசானது அளிக்கும் ஆதரவானது, இந்திய உப கண்டத்தின் பிராந்தியப் பொறுப்பாகவும் மனித உரிமைகளுக்கான உலகத்தின் தார்மீக சர்வதேச ஒத்துழைப்பாகவும் அமையுமென்றும் கனடியத் தமிழர் பேரவை நம்புகிறது.
உலகத் தமிழினமே நீதிக்காகக் குரல் எழுப்ப இயலாது தவித்த வேளையில், தங்களுக்கும் தங்களது கூட்டணிக்கும் தமிழ் இனப் பாதுகாப்பு, கடமை, பொறுப்பு ஆகியவற்றைப் புரிந்து கொண்டு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தமிழர் மத்தியில் தடைப்பட்ட தமிழ் இனப் பொதுத் தலைமையின் பாதுகாப்புப் பணியினை தொடர்ந்து சர்வதேச சட்ட ரீதியாக முன் எடுத்துச் செல்ல வல்ல ஒரு ஜனநாயக தமிழர் தலைமையாகவே தங்களைப் பேரவை பார்க்கிறது.
அரசியலில் நீதியை நிலை நாட்ட முயலும் தங்களது ஆட்சியில் தமிழக உறவுகள் மட்டுமன்றி, ஈழத் தமிழர்களும் பாதுகாப்பையும் ஜனநாயக சுதந்திரங்களையும் பெற்று, உலகின் ஏனைய தேசிய இனத்தவர் போல் கௌரவத்துடனும் அடிப்படை மனித உரிமைகளுடனும் வாழ்வார்கள் என்றும் பேரவை முழுமையாக நம்புகிறது.
மூன்றாவது தடைவையாகவும் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவுள்ள தங்களுக்கு மீண்டும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நன்றி.
இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள
உமாசுதன் சுந்தரமூர்த்தி
தலைவர், கனடிய தமிழர் பேரவை



0 Responses to தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது