தேர்தல் முடிவுகள் எதிர்வரும் மே 13ம் திகதியே வெளிவரும் என்பதால் தமிழகத் தேர்தல் சூடு இப்போதைக்கு தணியாது என்றே தோன்றுகின்றது. இரு கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் தான் வெற்றி பெறப்போவதாக உரக்கக்கூறுகின்றன. ஆனால், அ.தி.மு.க. கூட்டணி 141 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் மற்றும் அமைப்புக்களின் வாக்களிப்புக்கு முன்பான கணிப்பு கூறுகின்றன.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நிபுணர் குழு மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படியே இம் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்புக்களால் கடுப்பேறிப்போன கலைஞர், தனது ஆதரவு ஊடாகமான நக்கீரன் ஊடாக இதனை மாற்றி தி.மு.கவிற்கே அதிகமாக 140 இடங்களிலும், அ.தி.மு.கவிற்கு 94 இடங்களும் கிடைக்கவுள்ளதாக ஆய்வை வெளியிட்டு, ஆறுதல் பட்டுக்கொண்டார். ஆனாலும் தமிழக ஊடகங்கள் பலதினதும் கணிப்பு இம்முறை அ.தி.மு.கவின் கைதான் ஓங்கும் என்று அடித்துக்கூறுகின்றன. அத்தோடு, கருணாநிதியின் குடும்ப ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று பல ஊடகங்களும் இம்முறை வெளிப்படையாகவே கருத்துக்களை எழுதிவந்ததை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக ஆனந்தவிகடன் ‘மறக்க முடியுமா?’ என்ற தலையங்கத்தில் கருணாநிதியின் ஊழல்களையும், கொங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களின் அழிவிற்கான காரணங்களையும் தொடர்ச்சியாக எழுதி தனது எதிர்ப்பை வெளியிட்டுவந்தது. இதேவேளை, தினமணி கலைஞரின் சொத்து விபரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் 4.92 கோடி ரூபா மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - 15.45 கோடி ரூபா. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - 23.97 கோடி ரூபா. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு 75.18 இலட்சம் ரூபாமட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு 93 இலட்சம் ரூபா. ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? 2.25 கோடி ரூபா.
இப்படித்தான் அவரது அமைச்சர்களின் சொத்துக்கள் இருக்கின்றன என்று அது பட்டியல் வெளியிட்டது. அத்துடன், 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். 240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். கொங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருப்பதாக தினமணி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் 60,000 ரூபா மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் 15,000 ரூபா மதிப்புள்ள நகைகளும், வங்கியில் 25,000ரூபா இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் 17.47 இலட்சம் ரூபா இருக்கிறது. 1.75 கோடி ரூபா மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு 4.5 கோடி ரூபா. சொத்துபத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது இலட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது. அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்னசொல்ல என்றும் தினமணி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. சுமார் 78 வீதமான மக்கள் தமிழகத்தில் வாக்களித்துள்ளனர். மிக அதிகளவான வாக்குப் பதிவு என்பது ஆட்சி மாற்றத்தையே குறிப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த அதிகரித்த வாக்குப்பதிவினால் கலக்கமும், குழப்பமும் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, தன்னை இறுதியாக ஒருமுறை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கைக்கு பலமான ஆதரவுகிடைத்து வெற்றியும் பெற்றார். அது அவரது இறுதியான ஆட்சியாகக் கருதியே பெருமளவு மக்கள் வாக்களித்தாக கணிப்புக்கள் தெரிவித்தன.
ஆனால், இப்போது கட்சியில் தலைமைக்கு வரக்கூடிய நிலையில் தனதுமகன்கள் மட்டுமல்ல நீண்டகாலமாக தி.மு.கவின் உயர்மட்டத் தலைவர்களும் இருக்கும்போதும், குடும்ப ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கும் கலைஞர் தன்னால் நடமாடமுடியாத நிலையிலும்தானே அடுத்த ஆட்சியில் அமரவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார். கடந்தமுறை இறுதியாக வேண்டுகோள் விடுத்தவர், இம்முறை தன்னை 12வது தடவையாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்குமாறு கோரியுள்ளார்.
இறுதியாக கடந்தஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் பேசிய அவர் “நான் திருவாரூரில் எத்தனையோகூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று மணவறையில் உள்ளபுதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை தி.மு.க. ஆட்சி என்பதுபோல் பிரச்சாரம் செய்துவந்த கருணாநிதி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையலாம் என்று தற்போது கருத்துக்கூறத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே, 63 ஆசனங்களை வலியுறுத்திப்
பெற்றுள்ள கொங்கிரசின் திட்டமே கூட்டணி ஆட்சிதான் என ஊடகங்கள் பலகருத்துவெளியிட்டுவந்தபோது, மௌனமாக தட்டிக்கழித்த கருணாநிதி, வாக்களிப்புமுடிந்ததன் பின்னர் தனியாகவும் ஆட்சி அமைக்கலாம். கூட்டணியாகவும் அமைக்கலாம் என சூசகமாக கருத்து வெளியிட்டுள்ளது தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுஇவ்வாறிருக்க, தி.மு.க கூட்டணியில் கொங்கிரஸ் இருக்கும் நிலையில், வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்ராகுல். இதுவரை கருணாநிதியை சந்திக்கவோ, பிரச்சாரங்களில் ஒன்றாகமேடையேறவோ விரும்பாத ராகுல், கேரள மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத்தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் கொங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு வாக்குவேட்டையில் இறங்கியபோது, 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள்யோசிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள கொங்கிரசை ஆதரிக்க வேண்டுமென கூறியுள்ளார். இவரது கருத்தானது கருணாநிதிக்கும் சேர்த்தேசொல்லப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 63தொகுதிகளை, அதுவும் தாங்கள் தெரிவு செய்த தொகுதிகளை தி.மு.கவிடம் இருந்து பறித்தெடுத்த ராகுலின் திட்டம் தி.மு.க கூட்டணியின் பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர அனுமதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கொம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆரூடம் கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக எத்தனையோ அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் வரலாம் என்று எதிர்வுகூறப்படுகின்றது. இலத்திரன் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் இப்போது அடுத்த ஆட்சி யார் கையில் என்பதை புலனாய்வாளர்கள் ஏற்கனவே கணித்திருப்பார்கள், அதனை கூட்டணிக் கட்சிகளின் தலைமைகளுக்கு தெரிவித்திருப்பார்கள் என்றகருத்துக்களும் பரவலாக வெளிவரத் தொடங்கியுள்ளன. எனினும், வென்ற கூட்டணி எது என்பதை அறிய மக்கள் அடுத்த மாதம் 13ம் திகதி வரைகாத்திருக்கவேண்டியதுதான்.
தமிழக தேர்தல் வாக்குப் பதிவுகள்
1967 - 76.57 வீதம் (திமுக வெற்றி)
1971 - 72.10 வீதம் (திமுக வெற்றி)
1977 - 61.58 வீதம் (அதிமுக வெற்றி)
1980 - 65.42 வீதம் (அதிமுக வெற்றி)
1984 - 73.47 வீதம் (அதிமுக வெற்றி)
1989 - 69.69 வீதம் (திமுக வெற்றி)
1991 - 63.84 வீதம் (அதிமுக வெற்றி)
1996 - 66.95 வீதம் (திமுக வெற்றி)
2001 - 59.07 வீதம் (அதிமுக வெற்றி)
2006 - 70.56 வீதம் (திமுக வெற்றி)
ஈழமுரசு



0 Responses to தமிழகம் அடுத்த ஆட்சி யார் கையில்?