பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு.
சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன?
கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார்.
சிறீலங்காவின் தற்போதைய பாணியில் கூறுப்போனால் புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி இவர். தற்போது அவர் பற்றியும் அவர் சார்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், உதவியாளர்கள் நிலை பற்றியும் பல இடங்களில் பலவாறு பேச்சு அடிபடுவது அனைவரும் அறிந்து கொண்டுள்ள ஒரு விடயம்.
அதாவது நீண்ட காலமாக அரச விசுவாசியாக இருந்து சுகபோகங்களை அனுபவித்து வந்த பிள்ளையானை துரத்த ஆரம்பித்துள்ளது ஊழ்வினை என்று பேசிக் கொள்வோரும் உண்டு. கைதுகள் சோதனைகள் ஊடாக பிள்ளையான் ஏதோவொரு நெருக்கடிக்குள் உள்ளாகின்றார் உள்ளாக்கப்பட்டுகின்றார், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளார் என்பது உண்மை.
அல்லது அண்மையில் புனர்வாழ்வு ஆணையாளரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்ட புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளை சரணைடையுமாறு கூறப்பட்டதன் பின் விளைவோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
இன்று பிள்ளையான் குழு உறுபினர்களின் கைது, கடத்தல் மற்றும் அதிரடிச் சோதனைகள் என்று அதிர்ந்து போயுள்ளது கிழக்கின் நல்லாட்சிக்கு உதவிய ஒரு அரசியல் அமைப்பு. தனது எதிர்காலம் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளது இந்தக் கட்சி.
இது இரண்டாவது தடைவை, அதாவது கடந்த சிறீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச கூட்டமைப்பில் வெத்திலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டபோது இது பற்றி சிந்தித்தவர்கள் தற்போதும் மீண்டும் தமது நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.
மக்களுக்காக ஆட்சி என்று கோசமிட்டு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டிருந்தார். வடக்கு கிழக்குக்கு முலதமைச்சருக்குப் பின்னர், அதாவது வரதராஜபெருமாளுக்கு பின்னர் அரியணை ஏறிய பிள்ளையானும் சகாக்களும் இன்று நித்திரை இன்றி தவிக்கின்றனர். வீடுகளுக்குள் சிறீலங்கா காவல்துறை எப்போது பாயும் எனத் தெரியாமல் விழிக்கின்றனர்.
கருணாவின் தம்பிகள் மற்றும் முன்னணி சகாக்கள் அடுத்தடுத்து கொல்லப்பட, மெதுவாக தானாக படிப்படியாக கருணாவுக்கு அருகில் முன்னேறிய பிள்ளையான், கருணா பிரித்தானியாவில் சிறை இருக்கையில் மெதுவாக கருணாவின் இடத்துக்கே முன்னேறியிருந்தார்.
கருணாவின் ஆலோசகரான ரகு 2008 கார்த்திகை 14ஆம் நாள் கொல்லப்பட பிள்ளையானின் கையில் கட்சி தாவிக்கொண்டது. அதாவது கருணா சிறை இருக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியை பதிவு செய்தவர் ரகு.
இறக்குபோது 39 வயதான ரகு, கருணா மற்றும் பிள்ளையானிடையில் மொழியறிவு மற்றும் அரசியல் அறிவு கொண்டவராக இருந்ததாக தெரிவிக்கும் கிழக்கு மக்கள், அவரை ஆலோசகராக அவுஸ்ரேலியாவில் இருந்து அழைத்த கருணா இறுதியில் அவரை ஏமாற்றி, சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் முடங்கிக் கொண்டது அனைவரும் அறிந்தது.
ஆனால் ரகுவின் கொலை அதன் பின்னர் பிள்ளையானின் பிறிதொரு ஆலோசகரான கலாநிதி விக்கினேஸ்வரன் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமை தொடர்பில் கடும் சந்தேகங்கள் மற்றும் ஊகங்கள் அந்த சந்தர்ப்பத்தில் வெளி வந்திருந்தன.
அதாவது விக்னேஸ்வரன் மற்றும் ரகு கூட்டணி இந்தியாவின் பக்கம் சாய்ந்துள்ளதாகவும், அது சிறீலங்கா அரசுக்கு பெரும் நெருக்கடியை கொண்டு வரக்கூடியதொன்றாக சிறீலங்கா பார்ப்பதாகவும் கூறப்பட்டது. அதில் உண்மைகள் இருப்பதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக அன்று விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கிழக்கில் படைத்துறை நிர்வாகம் இடம்பெறுவதாகவும், திருகோணமலை அரச அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் படைத்தரப்பை சார்ந்தவர்கள் என்னும் அதிருப்தியை வெளியிட்டு, அவர்களை அப்புறப்படுத்தி தமிழர் தரப்பில் இருந்து அவ் அதிகாரிகளை தெரிவு செய்யக் கோரி இந்தியாவுடன் பேச்சு நடாத்தியதாகவும், அதன் பின்னரே அந்தக் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நடந்தேறியுள்ளதாகவும் முன்னர் கிழக்கில் பேசப்பட்டது.
அது மட்டுமன்றி அன்று ரகு சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அன்றும் இன்றும் பல சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில், சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிய முக்கிய தமிழ் நண்பர் ஒருவரின் இறப்பு பற்றி இதுவரை சிறீலங்கா அலட்டிக் கொண்டதாகவோ அன்றி விசாரணைகள் செய்ததாகவோ தெரியவில்லை.
அதாவது சிறீலங்காவின் நல்லாட்சி மற்றும் கிழக்கில் மக்களாட்சி என்னும் வார்த்தைக்கு வடிவம் கொடுத்ததாக காட்டிக்கொள்ள பயன்படுத்தப்பட்டவர்கள் பற்றி சிறீலங்கா அலட்டிக் கொள்ளாதது பெரும் சந்தேகங்களை அந்த சந்தர்ப்பத்தில் எழுப்பியிருந்தது.
இது இவ்வாறு இருக்க கடந்த நாட்களில் கிழக்கில் உருவாக்கப்பட்ட செயற்கை பதட்டம் மற்றும் அதை தொடர்ந்தான கைதுகள், கொலைகள் என கிழக்கு பாதுகாப்பு ரீதியில் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது அல்லது ஆட்டி வைக்கப்படுகின்றது. முன்னர் பல சந்தர்ப்பங்களில் பிள்ளையானும் கருணாவும் மறைமுகமாகவும், கருணா பிள்ளையானின் சகாக்கள் நேரடியாகவும் மோதிக்ககொண்டது செய்திகளாக வெளிவந்திருந்தன.
அமெரிக்க தூதுவரின் கிழக்கிற்கான பயணம் மற்றும் பல அதிகாரிகளின் சந்திப்பை தொடர்ந்து இவ் பதட்டம் உருவாகியுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது. அது மட்டுமல்ல கருணாவின் தற்போதைய நெருங்கிய சகா இனியபாரதியின் சிறுவர் படை பற்றிய விவகாரம் அறிக்கையாக வெளிவந்துள்ள நிலையில் இவ் கொலைகள் மற்றும் கடத்தல்கள் உடல மீட்புக்கள் இடம்பெறுகின்றன.
இவற்றிற்கு மேலாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அதிலும் சிறீலங்காவால் தோழில் கைபோட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது சகாக்கள் என அடையாளம் காட்டப்பட்ட மாநகரசபை உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்பது சிலருக்கு சந்தேகங்களை உண்டு பண்ணினாலும், பலர் இவ் நடவடிக்கைகளின் விடங்களின் தோற்றுவாய்கள் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அதாவது அரசியலில் பிழவுகள் பிரிவுகள் இன்னும் பல அரசு சார் விடயங்களுக்கு பெயர் போன நல்ல நண்பர்கள் ஏன் தற்போது எதிரியானார்கள் எனத் பலர் தேடுகின்றனர்.
அதாவது இலங்கையை ஆட்டிவைக்கும் இலங்கையின் ஆட்சி நாற்காலியை அலங்கரிக்கும் முன்னணி தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் மற்றும் ஒரு சில இராஜதந்திரிகளை கிலிகொள்ள வைத்திருக்கும் ஐ.நா அறிக்கை சூடு அதிகரிக்கையில் சிறீலங்கா இவ்வாறு நடந்து கொள்வது ஏன் என்பது கேள்வி.
இதற்கு இரண்டு பதில்கள் கிடைக்கின்றன. ஒன்று பிள்ளையானின் இந்தியா சார்பு நிலையும், அண்மைக் காலமாக இவர் மேற்கொண்ட கருணா எதிர்ப்பு பரப்புரைகளுமாகும் என்று வாதிடுவோர் இருக்கின்றனர்.
ஐ.நாவின் அறிக்கைக்கு எதிரான பிள்ளையானின் அரசு விசுவாச கருத்துக்களின் கனம் இன்மையால் விரக்தி அடைந்துள்ள கோத்தபாய தனது நிலைப்பாட்டை பலமுறை பிள்ளையானுக்கு தெரியப்படுத்தி எச்சரித்தும் நல்ல பிள்ளையாக அதை கேட்காமல் இந்தியாவின் நட்பு கைகொடுக்கும் என்னும் நம்பிகையில் சிறுபிள்ளையாக நடந்து கொண்டமைக்கு பழிவாங்குதல் நடைபெறுகின்றது என்னும் சாரப்படவும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அது மட்டுமல்ல போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டால் கருணாவின் தலைக்கும் ஆபத்து என்பது மட்டுமன்றி நல்லிணக் ஆணைக்குழு விசாரணை நடந்தால் கிழக்கின் 600 சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டமை கருணாவை துரத்தும் என்றும் கருத்துகள் காணப்படுகின்றன. இதை பல சிங்கள படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னான சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே செய்த கொலைகளை மறைக்க பல கொலைகள் செய்வது போல் போர்க்குற்றவாளிகள் என்று அடையாளப் படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் சில சகாக்கள் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்குள் உட்படாமல் உயிரோடு இருக்க சிறை செல்ல வேண்டும். இன்னும் பல உயிர் இழக்கப்பட வேண்டும் என்பது உண்மையோ என சிந்திக்க வைத்துள்ளது கிழக்கின் நிலமை.
இந்நிலையில் மக்கள் அச்சத்துடன் நாட்களை கடக்க, கிழக்கில் அரசு பொறுப்பற்று நடக்கின்றது என்று எண்ணுவோரும் கிழக்கின் தமிழ் மக்கள் ஆனுதாபத்தை அரசு இழக்கின்றது என்றும் பேசிக் கொள்ளும் பதவிப்பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதாவது அரசு சார்பு நிலையில் இருந்து தமிழ் மக்களிடையில் உலாவும் தமிழர்கள் சிலரிடத்தில் இக் கவலை மேலோங்கியுள்ளது.
இது இவ்வாறு இருக்க தற்போது கிழக்கில் பிள்ளையானுக்கும் சகாக்களுக்கும் நடந்துள்ள கைதுகள் மற்றும் சோதனைகள் சிறீலங்கா மீது நம்பிக்கை வைக்கலாமா இல்லையா என்னும் சந்தேகத்தை பல அரசு சார் தமிழர்களிடத்தில் விதைத்துள்ளது.
அதாவது நெருங்கிய விசுவாசியாக இருந்தவர் இன்று சிறைக்கு அனுப்பப்பட அல்லது குற்றவாளியாக காட்டப்பட ஒத்திகைகள் நடந்தேறிக் கொண்டுள்ள நிலையில், இது ஏன் என்ற ஒரு கேள்வி பலரிடத்தில் எழுந்துள்ளது.
அதாவது மாகாண சபைகள் மற்றும் அதன் அதிகார வரம்புக்குள் நாற்காலிகளை அலங்கரித்து பட்டம் பதவியுடன் தலைவர்களாக எண்ணிக்கொண்டு வாழ்ந்துவிட எண்ணும் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிள்ளையானின் இன்றைய நிலைமை வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
நாம் சாய்ந்தாலும் அடிப்பார் சாயா விட்டாலும் அடிப்பர். சாய்ந்தபின்னர் மௌனமாக இருந்தாலும் அடிப்பர் என்றால் என்ன செய்வது என்று எண்ண ஆரம்பித்துள்ளனர் அவர்கள். அதாவது சாய்ந்தால் மகிந்த கூட்டாளிகள் எழுதிக் கொடுப்பதை சரி பிழை பார்க்காது எழுத்து பிழை இருந்தால் கூட உச்சரிக்க வேண்டும் என எண்ணும் சிங்கள பௌத்த சேதியவாத மேலாதிக்கத்திடம் இருந்து எதை பெறப்போகிற்றோம்? பேச்சு மூலம் சிங்களம் கூறும் நாட்டுக்குள் வேறு தலையீடு இன்றி எவ்வாறு சிங்களவர்களுடன் வாழப்போகின்றோம் என்றும் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் எழ ஆரம்பித்துள்ளது உண்மை.
இது இறுதியில் ஒன்றை உணர்த்தி நிற்கின்றது, அதாவது நாம் சுயநிர்ணய உரிமைக்கான சுய ஆட்சிக்கானவர்கள் என்னும் முடிவிற்க்கு வரும்வரை இவ் கொலைகளும், கடத்தல் நாடகங்களும், அச்சுறுத்தல் மற்றும் வேசமிடுதல்களும் காட்டிக் கொடுப்புக்களும் தொடரும் அதேவேளை, தமிழ் தலைவர்களிடையான பிளவும் அரசின் பிரித்தாளும் நடவடிக்கையும் முற்றுப்பெறாது.



0 Responses to பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்??