இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளக்கடக்கப்பட்டிருக்கும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை சபையின் 17ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தபின் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதலில் அரசாங்கப்படைகளும் விடுதலைப்புலிகளும் சர்வதேச சட்டங்களை பரந்த அளவில் மீறியுள்ளதாக நம்பத்தகுந்த சான்றுகளைக் கொண்ட குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு தனது பொறுப்புக்கூறுவது தொடர்பான அறிக்கையில் முடிவாகத் தெரிவித்துள்ளது குறித்தும் நான் இங்கு பிரஸ்தாபிக்கின்றேன்.
அத்துடன் அரசாங்கம் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டியது அந்நாட்டின் கடமையாகும்.
சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைத்து தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்ற சிபாரிசை நான் பூரணமாக ஆதரிக்கின்றேன். தேவையானால் அதனை சுயமாகவும் முன்னெடுக்க வேண்டும்.
இலங்கை பற்றிய முன்னர் இடம்பெற்ற பரிசீலனையினதும் உலகம் முழுவதிலுமான சண்டையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றின் பின்னணியில் இம்முக்கிய அறிக்கையில் உள்ள புதிய தகவலை ஏற்றுக் கொண்டு மனித உரிமை சபை தனது நிலையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தொடர்ந்தும் உரையாற்றும் போது நவநீதம்பிள்ளை கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கையின் பிரதிநிதியாக பிரஸ்தா அமர்வில் கலந்து கொண்டிருக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று ஐரோப்பிய நேரம் 2.30மணிக்கு உரையாற்றுகின்றார். இந்த அமர்வு எதிர்வரும் ஜுன் மாதம் 17ம் திகதி வரை நடைபெறும்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம்
பதிந்தவர்:
Anonymous
30 May 2011



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம்