ராஜீவ் காந்தி படுகொலையின் 20 ம் ஆண்டு நினைவு வந்ததால் அவர் குறித்த கருத்துக்கள் பலர் தத்தமது அரசியலுக்கு ஏற்ப கற்பிதம் பண்ணி வருகிறார்கள். இவர்கள் யாருமே இதுபோல அவலம் வராமல் தடுக்கும் நல்ல பாதைகளை மக்களுக்கு முன் வைத்ததாகக் கூற முடியாது.
ராஜீவ் ஏன் இறந்தார்..? அவர் உயிர் கொடுத்த நிகழ்வுக்கு பழிக்குப் பழி வாங்குவதா அவருடைய ஆத்மா சாந்திக்கு நாம் செய்யும் கடமை.. ? என்று இவர்கள் யாருமே சிந்திக்கவில்லை.
முதலில் அவருடைய மரணத்திற்குக் காரணமான ஈழ இனச்சிக்கலை தீர்த்து அமைதியை ஏற்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு. காந்தி என்ற அவருடைய பெயருக்கு நாம் செய்யக் கூடிய மரியாதை. இதுகூட தெரியாதவர்களே இன்றைய அரசியலில் உள்ளார்கள்.
இவர்களுடைய கருத்துக்கள் வருமாறு:
1. ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் வட இந்தியாவில் உள்ளனர் அவர்களை பா.சிதம்பரத்திற்கு தெரியும் – கூறியவர் தா.பாண்டியன்.
2. ராஜீவ் காந்தி கொலை பற்றி இங்கு இனி யாரும் பேசக்கூடாது. ஈழத்தில் 12.500 தமிழரை கொன்றது இந்திய இராணுவம். அதை அனுப்பிய ராஜீவ்காந்தி பற்றி இனி பேச எதுவும் இல்லை – கூறியவர் சீமான்.
3. ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டவர் தலைவர் பிரபாகரனே அதற்காக நான் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் – கே.பி. (ராஜீவ் காந்தி கொலையுடன் கே.பியையும் ஐ.தே.க தொடர்புபடுத்தி பேசுவதால் தன்னைக் காக்க கே.பி. இதை பேசியுள்ளது தெரிகிறது)
இதபோல ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையை திமுகவுடன் தொடர்புபடுத்தியதை காங்கிரஸ் கண்டித்துள்ளது.
இது குறித்த செய்தி வருமாறு:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலையில் திமுகவை தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்தார்.
திராவிட இயக்க கொள்கைதான் ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்ததாக பத்மநாபன் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு என்றார்.
ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ் காந்தி கொலை மிகவும் கொடூரமான, உணர்வுப்பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ் துயரச் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.



0 Responses to ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்