ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்சியாக, முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழர்களின் அரசியல் ஆயுதமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக, மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நாடுவாரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் விளக்கவுரைகளுடன், மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும் வகையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
இதனொரு அங்கமாக நியூசிலாந்திலும் - அவுஸ்திரேலியாவிலும் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா:
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ஹோமேபுஷ் பாடசாலை முதன்மை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் அரங்கத்தில், பேர்த், விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து ஆகிய மாநில நாடு கடந்த அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.
நிகழ்ச்சியை, நியூ சவுத் வேல்ஸ் மக்கள் பிரதிநிதி தர்சன் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைக்க, அவுஸ்திரேலிய தேசியக் கொடியை வைத்திய கலாநிதி ராகவன் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியை ஒருங்கிணைந்த தமிழர் அமைப்புகளின் தலைவர் திரு கண்டராஜாவும் ஏற்றி வைத்தனர்.
புலம்பெயர் தமிழ் சமூகம் ஏன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்ட வேண்டும் என்ற விளக்கவுரையுடன் யோகன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நாடு கடந்த அரசாங்கத்தின் இலக்கு தமிழீழம் தான் எனவும், தமிழீழத் தீர்வு ஒன்றே ஈழத் தமிழரின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்வாக அமையுமெனவும், நாடு கடந்த அரசாங்கத்தின் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான பேராசிரியர் செல்வநாதன் அவர்கள் தமது தொடக்கவுரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்கள் பிரதிநிதி பிரபாகரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைபையும் அதன் தனித்துவத்தையும் விளக்கி கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள், தான் தமிழ் ஈழத்தில் பிறவாதபோதும், காலத்தின் தேவையும் தான் ஒரு தமிழனாக இருப்பதும் தன்னை தமிழீழத்தை மீட்கும் போராட்டத்தில் இணைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
விக்டோரியா மாநில மக்கள் பிரதிநிதி தமது மாநிலத்தில் நாடு கடந்த அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளக்கி, மக்கள் பங்காளிகளாக செயற்படுவதாகவும், அதே நிலைமை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிறைவாக தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நியூசிலாந்து:
நியூசிலாந்து - தமிழ் சங்கத்தின் உறுதுணையுடன், சங்க தலைவர் வைத்திய கலாநிதி சிவா வசந்தன் தலைமையில் மக்கள் அரங்கம் நிகழ்வு இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின், நியூசிலாந்து மக்கள் பிரதிநிதி தேவராஜன் அவர்கள், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் ஆவணபடுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கியதோடு ஆவணப்படுத்தலில் இளம் தலைமுறை பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
நாடு கடந்த அரசாங்கம் சனநாயக ரீதியில் தமிழீழத்தை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பது உறுதி எனத் தெரிவித்த நாடு கடந்த தமிழீழ அரசின் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன், இந்த மீட்டெடுப்பு போராட்டத்தில் சகல தமிழ் மக்களும் இணைந்து பங்கு ஆற்றினால் வெகு விரைவில் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் உதவியுடன் நாம் எமது நாட்டை விடுதலையை வென்றெடுக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்துவோம்! மக்கள் அரங்கத்தில் உறுதிபூண்ட தமிழர்கள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 May 2011



0 Responses to தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்துவோம்! மக்கள் அரங்கத்தில் உறுதிபூண்ட தமிழர்கள்