Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கம், பல சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நடாத்திக் கொண்டுள்ள தலமைத்துவம் மற்றும் சாதகமாகச் சிந்திக்கும் பயிற்சி (Leadership and positive-thinking training) என்னும் போர்வையிலான பல்கலை மாணவர்களுக்கான பயிற்சிகள் பற்றிய சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

திடீர் என்று எங்கிருந்தோ முளைத்த திட்டத்தின் அடிப்படையில் சில மாணவர்களுக்கு பெரும் பொருள் செலவில் படைத்துறை பயிற்சி அளிக்க சிறீலங்கா முயன்று வருகின்றமை பல்வேறு சந்தேகங்களைக் கிழப்பியுள்ளது.

ஆனால் உலகின் கண்களை ஏமாற்ற ஒரு சில தமிழ் மாணவர்களும் வலுக்கட்டாயமாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் உதவியுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அல்லது சேர்த்துக் கொண்டதாக காட்டப்பட்டுள்ளனர். இந்தப் படைத்துறைப் பயிற்சி தமிழ் மாணவர்களுக்கு தேவையற்றது என்பதற்கு அப்பால் இதிலும்கூட பாகுபாடு உண்டு. இங்கு நடைபெறும் பாகுபாடு தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதாவது இங்கு நடைபெறும் பாகுபாடுகள் இனரீதியான, மத ரீதியான பாகுபாடுகள். சிங்கள பௌத்த மேலாதிக்கம் மற்றும் இன்னோரன்ன அடக்குமுறையின் வடிவங்கள். எதிர்காலத்தில் வடிவெடுக்கப்போகும் சிந்தனைகளே இந்தப் பயிற்சிக்குள் மறைந்து கிடக்கின்றன.

இதில் கலந்து கொண்டுள்ள அல்லது கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைக்கப்படடுள்ள தமிழ் மற்றும் முஸலீம் மாணவர்கள் நேற்று பெற்றோருடன் தொடர்பு கொண்டபோது பல தகவல்களை தெரிவித்து கதறி அழுதுள்ளதாக ஈழம் டெய்லியின் பிராந்திய செய்தியாளர்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

சரியான அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாது தம்மை கவனிப்பார் அற்று நடத்துவதாகவும், சிங்களத்திலேயே உரையாடல்கள் நடைபெறுவதாகவும், இது சிங்கள மேலாதிக்கத்தை காட்ட நடைபெறும் பயிற்சி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறை வழிபாட்டில் இருந்து தங்குமிடம் போக்குவரத்து அனைத்திலும் தமிழ் முஸ்லீம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளிப்பதற்கு கூட மறைவிடங்கள் இன்றி தமிழ் மாணவிகள் அவஸ்த்தைப்படுவதாகவும், சிங்கள மாணவர்கள் உண்ட பின்னரே தமிழ் மாணவர்களுக்கு உணவளிக்கப்படுவதாகவுமு; தெரிவிக்கப்படுகின்றது.

ஏறத்தாள 55 வரையான தமிழ் மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்; இருந்தும் சில மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமக்கு பல்கலைக்கழகமே கடுமையான உத்தரவை பிறப்பித்து இவ் படையப்பயிற்சிக்கு செல்லும்படி பணித்ததாக தெரிவித்துள்ள அம் மாணவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

தலைமைத்துவப் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னும் கையேடு ஒன்றும் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டை கொழும்பு சிறப்புச் செய்தியாளர் பார்வையிட்டிருக்கின்றார்.

அதில் படைத்துறைப் பயிற்சிகளான கயிறேற்றம் மற்றும் தொங்கேணிப் பயிற்சிகள்., பதுங்கி நடத்தல் மற்றும் “கிறெளலிங்” எனப்படும் சத்தமின்றி நிலத்தோடு நகரும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுமையான படைத்துறைப்பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த வதிவிடப்பயிற்சி, புதிய மாணவர்கள் தம்மை பகிடி வதையில் இருந்து பாதுகாக்கவே, அவர்களை தைரியமூட்டவே வழங்கப்படுவதாக சிறீலங்கா தெரிவித்திருந்தது. சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியும், போர்க்குற்ற நபருமான மகிந்த ராஜபக்சகூட இதனைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது நகர்வு பயிற்சிகள் மற்றும் விசேட படையினருக்கு வழங்குவது போன்ற போர்ப்பயிற்சிகள் எதற்கு என்னும் கேள்வி எழுந்துள்ளது. அதாவது வருடாவருடம் 18000 பேர் வரை பல்கலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களை சத்தமின்றி சிறீலங்கா படைக்குள் உள்வாங்கும் செயற்பாடே சிறீலங்காவின் மறைமுக நிகழச்சி நிரல் என சந்தேகம் கொள்ளச் செய்கின்றது.

இது மட்டுமன்றி சிறீலங்காவின் தேசியகீதம் பற்றிய விளக்கம் மற்றும் அதன் வரலாறுகள் அதனது முக்கியத்துவம் பற்றிய விளக்கமும் இந்தப் பயிற்சியில் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. இது ஏன் என்பது அடுத்த கேள்வி. அதாவது இதுவரை சிறீலங்காவின் தேசிய கீதம் தெரியாது ஒருவர் பல்கலைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் என்றால் அது சிறீலங்காவுக்கே வெட்கம். ஆனால் தனது தேசிய கீதத்தை தமிழ் மக்களிடத்தில் திணிக்க மாணவர்களைக் கொண்டு காய் நகர்த்தல்களை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்கின்றது.

முப்பது வருட ஆயுத முரண்பாட்டை ஆயுத வழியில் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து மார்தட்டி உலகமெங்கும் புகழ்தேடி அலைகையில் மீண்டும் ஒரு ஆயுத கலாச்சாரத்தின் மூலம் அதாவது தலைமைத்துவப் பயிற்சி என்னும் போர்வையில் ஆயுதம் பயிற்சி வழங்கி, அதன் மூலம் முரண்பபாட்டை தீர்க்கப் போவதாக அப்பட்டமாக தெரிவித்துள்ளது சிறீலங்கா. அதுவும் எதிர்கால நற்பிரசைகளாக இருக்க வேண்டிய மாணவர்களை ஆயததாரிகள் ஆக்கி.

இதைவிட தமிழ் மக்களின் அதாவது சிறீலங்காவில் உண்மையான ஆதிக் குடிகளாக இருந்து வரலாற்று திரிபுகள் மூலம் இன்று இரண்டாம் பிரசைகள் ஆக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வரலாற்றை மறைத்து தலைமைத்துவ பயிற்சி என்னும் போர்வையில் ஒரு வரலாற்று பிறழ்வின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க முனைந்துள்ளது சிறீலங்கா.

இதில் ஆரியர் வருகை மற்றும் முழுச்சிங்கள மன்னர்களால் சிறீலங்கா ஆளப்பட்டதாக காட்டுவதற்கு சில வரலாற்று பாடங்களும் நடாத்தப்பட உள்ளதாக அறிய முடிகின்றது. அதாவது துட்டகைமுனு, விஜயபாகு போன்றோரின் வரலாறும், தமிழ் மன்னன் எல்லாளன் சிங்கள மன்னன் துட்டகைமுனுவால் வஞ்சகமாக கொல்லப்பட்ட வரலாறுகள் பாடமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இளையோர் மத்தியில் தமிழ் மக்களுக்கு இங்கு இடமில்லை என்பதை காட்ட மேற்காள்ளப்பட திட்டங்களாகக் கருதப்படுகின்றது.

இதைவிட உலகின் மிக முக்கியமான தலைவர்கள் என்னும் பாடம் இடம்பெறவுள்ளதாகவும், அதில் மகாத்மா காந்தி தவிர மகிந்த ராஜபக்ச, சிறீலங்காவின் சுதந்திரபோராட்டத்துக்கு உழைத்தவர் என்று சொல்லப்படும் அனாகரிக தர்மபால, புரான் அப்பு மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகிய சிறீலங்காவின் பௌத்த தேசியவாதிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மிகவும் நகைப்புக்கிடமான இப்பாடத்தில் காந்தியுடன் மகிந்தவை ஒப்பிட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி உலகம் அறிந்த தமிழ் விடுதலைப் போராட்டகாரர்களான சேர் பொன் இராமநாதன் மற்றும் பலர் இவ் பாடங்களில் சேர்க்கப்பவில்லை. அது மட்மன்றி எவ்வித தமிழ் வாடையும் வரலாற்று பதிவுகளும் இன்றி இது திட்டமிடப்பட்டுள்ளமை இன அழிப்பு மற்றும் வரலாற்று துடைப்பின் மிக உச்ச திட்டமிடல் ஆகும்.

இதை விட சிறீலங்காவின் சிறுபிள்ளைத்தனம் என்னவென்றால் பெரும் கல்வியாளர்கள் மற்றும் உலகின் கவனத்iதை சிறீலங்காபால் ஈர்த்த பல மூளையாளர்கள் இருக்கும்போதும், வெறும் 8ஆம் தரம் மாத்திரம் கற்று சில காலம் சிறீலங்காவின் அதிபராக இருந்து கொல்லப்பட்ட பிரேமதாசவை இதில் இணைத்துள்ளமையாகும்.

பலருக்கும் ஆச்சரியம் தரும் இவ் விடயத்தில் ஒரு பாரிய இராஜதந்திரத்தை சிறீலங்கா முயன்றுள்ளது என்பது வெளிப்படை. இன்று ஐக்கிய தேசியக கட்சிக்கும் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் உள்ள உறவின் விரிசலை சாதகமாக்கி, பிரேமதாசவை சிறீலங்காவின் போற்றத்தகு தலைவராக காட்டி சஜித்தையும் அவருடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவைத் தன்பக்கம் இழுக்க சிறீலங்கா திட்டமிட்டுள்ளது. இது மட்டுமன்றி சஜித் பகுதியில் இருந்து வெளியிடப்படும் இப்படைத்துதைப் பயிற்சிக்கு எதிராக கருத்துக்களை அடக்கவும் சிறீலங்கா இந்த கண்துடைப்பை மேற்கொண்டுள்ளது.

22 ஆயிரம் மாணவர்கள் இவ்வாறான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 12 ஆயிரம் பேருக்கான பயிற்சிகள் இன்று (24-05-2011) ஆரம்பித்திருப்பதாகவும், சிறீலங்காவிலுள்ள 28 படை முகாம்களிலேயே இந்தப் பயிற்சிகள் இட்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலமைத்துவம் மற்றும் சாதகமாகச் சிந்திக்கும் பயிற்சி என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சிக்கு தமிழர் தரப்பு மட்டுமன்றி, சிறீலங்காவின் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடைய மாணவர் அமைப்புக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதை செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையை முற்றாகப் படைத்துறை மயப்படுத்தும் நடடிக்கை இதுவென வர்ணித்துள்ள மாணவர் அமைப்புக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைக் கொண்டுள்ள எதிர்க்கட்சியான ஜே.வி.பியின் மாணவர் அமைப்பான அனைத்துலக பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (Inter University Students Federation - IUSF) தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதில் இன்னொரு விடயமும் உற்றுநோக்கத்தக்கது. 1971 இலும் பின்னர் 1988 - 89 காலப்பகுதியிலும் ஜே.வி.பி அல்லது மக்கள் விடுதலைக் கட்சி என்பன நடத்திய கிளர்ச்சிகளில் பல்கலைக்கழ மாணவர்களே அதிகம் கலந்துகொண்டனர். அதிகம் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழின அழிப்பு நடவடிக்கையின் பிரதான கலவரத்தின் பின்னரான தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் கலந்துகொண்டனர். அகிம்சை வழியைத் தவிர்த்து ஆயுதப் போராட்டமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் பல்கலைக்கழ மட்டத்திலேயே உதித்தது.

தமிழீழத்தில் தற்பொழுதும் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும், அல்லது மக்களை வழிநடத்தும், ஏன் பல்கலை மாணவர்களின் பின்னால் வழி நடக்க மக்கள் தயாராக இருப்பதும், அடக்குமுறைகளையும் மீறி நினைவு நிகழ்வுகளை பல்கலைச் சமூகம் மேற்கொண்டு வருவதையும் சிங்களம் அவதானித்திருக்கும்.

இப்பொழுது சிறீலங்காவில் இடம்பெறும் படைத்துறைப் பாணியிலான ஆட்சிமுறை சிங்கள அல்லது தமிழ் மாணவர்கள் மத்தியில், குறிப்பாக பல்கலை மாணவர்கள் மத்தியில் மற்றொரு ஆயுதப் போராட்டத்திற்கான அவசியம் பற்றி தோற்றுவாய் கருத்துக்கு இடமளிக்கும் என சிறீலங்கா அரசாங்கம் எண்ணுகின்றது. எனவேதான் பல்கலை மாணவர்களை அதுவும் புதிய மாணவர்களை இலக்கு வைக்க சிறீலங்கா ஆட்சியாளர்கள் தலைப்பட்டுள்ளனர்.

இவை அனைத்திலும் இருந்து சிறீலங்காவின் இனவாத சிங்கள அடிப்படைவாத போக்கு எவ்வாறு படிப்படியாக தென்னிலங்கை முதல் யாழ்ப்பாணம்வரை பரவி வரகின்றது பரப்பப்படுகின்றது என்பது தெளிவு.

இவையனைத்தையும் நாம் தோல்வியாகப் பார்க்காது இதில் இருந்து எமக்கு சாதகமான விடயங்களை தேடி அதில் இருந்து சிறீலங்காவின் தூரப்பார்வையை சிதைக்கும் புள்ளியை நாம் இட்டுக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மை மக்கள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் போரில் வெல்லாதுவிட்டாலும் உளவியலில் வெல்லலாம் என்பது உலகம் காட்டித் தந்துள்ளது. வரலாறுகள் விதந்துரைத்துள்ளது.

தாயகத்தில் இளையோரை குறிவைத்து சிறீலங்கா காய் நகர்த்த, புலத்தில் சிறீலங்காவை இலக்கு வைத்து இளையோர் காய் நகர்த்த வேண்டும் என்பது இங்குள்ள விடுதலை வேட்கையோடு அலையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ள அனைவரது விருப்பாகும்.

நிறைவாக இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். போர் காலத்திலே பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி உட்பட மருத்துப் பயற்சிகளையும், தற்காப்புப் பயிற்சிகளையும் விடுதலைப் புலிகள் வழங்கியபோது, தாம் தூம் எனக் குதித்த தமிழ் மக்களில் சிலரும், மனித உரிமை அமைப்புக்களும் இப்பொழுது போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் இந்தப் படைத்துறைப் பயிற்சி தொடர்பாக ஏன் மௌனமாக இருக்கின்றனர்?

0 Responses to பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி – வெளிவராத தவகல்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com