தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்க தரப்பிற்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரண்டு தரப்பினருமே மௌனம் காத்தனர். இறுதியில் இவர்கள் இருவரும் கலந்துரையாடிய விடயங்கள் கசியத் தொடங்கின.
கிராமசபை, பிரதேசசபை, நகர, மாநகர சபை மட்டத்தில் நிர்வாக ரீதியில் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்தே அரசாங்கத் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவே அந்தச் செய்திகள் அமைந்தன. ஆனால், இந்தச் செய்தி பற்றிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு பகுதியினரும் கருத்துக் கூற முன்வரவில்லை.
எனினும், பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
அரசாங்கத் தரப்பு கூட்டமைப்பு தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியது.
இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று அறிக்கை விட்டது குறித்து அரசாங்கத் தரப்பு அதிருப்தியில் ஆழ்ந்தது.
இதன் எதிரொலி அரசாங்கத்தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முன்னாள் பிரதம மந்திரியும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்து விலகினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசாங்கம் தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி கூட்டமைப்பு அல்ல. நாம் கூட்டமைப்புடன் பேசும் அதேவேளையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவோம் என்று கூறுகின்றது.
அரசாங்கம் கூறுகின்ற அனைத்துக் கட்சிகள் என்பது அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளாகும்.
அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது போன்று அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.
அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்த போது பேச்சுவார்த்தை நடத்தாது தற்போது தனித்தனியாக அழைத்துப் பேசப் போவதாக அரசாங்கம் கூறுவதின் அர்த்தம் தமிழ் மக்களுக்குப் புரியாத தொன்றல்ல.
தமிழ்த் தலைமைகளும் தமிழ்க் கட்சிகளும் புரிந்து கொண்டால் சரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் தமிழ்க்கட்சிகள் என்ற வகையில் ஈ.பி. டி.பி.யின் செயலாளர் நாயகம், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சரும், சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான முரளிதரன் (கருணா ) ஆகியோரே உள்ளனர். இவர்கள் அரசாங்கத்தின் உள்வீட்டுப் பிள்ளைகள். ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கொள்கையை நீண்டகாலமாக வைத்துள்ளார்.
அத்துடன், இவர்கள் இருவருமே அரசாங்கத்தில் செல்வாக்குமிக்கவர்கள். இருவருமே போராளியாக இருந்து அமைச்சர்களானவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வில் குறிப்பாக, இன விவகாரத்துக்கான தீர்வில் அக்கறை காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
இதற்கும் அப்பால் அரசாங்கம் தற்போது 13 பிளஸ் பற்றிப் பேசுகின்றது. அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் செனட் சபை பற்றியதாகும்.
அரசாங்கம் கூறுகின்ற செனட் சபை அதிகாரமிக்கதாக அமையுமா? அல்லது அரசாங்கத்தின் கரங்களால் இயங்கும் ரோபோவாக அமையுமா? என்பதெல்லாம் வினாவுக்குரியன.
பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அதிகாரப் பரவலாக்கலையே நாம் கேட்கின்றோம். செனட் சபையை அல்ல என்று கூட்டமைப்பு நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அரசாங்கம் விரும்பியிருந்தால் குறைந்த பட்சம் அது அமைத்து தற்போது கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கும் பேராசியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கையளித்த அறிக்கையாவது பேச்சுவார்த்தைக்கு கையில் எடுத்திருக்கலாம்.
ஒன்றரை வருடங்களாக 63 அமர்வுகளில் கூடி 2008 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி மேற்படி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஆனால், இன்று அரசாங்கம் அறிக்கையை ஒரு புறம் வைத்துவிட்டு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையைக் கூட்டமைப்புடன் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கி ஆறாவது சுற்று தொடங்வதற்கு முன் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல என்ற பிரகடனம் அரசாங்கத் தரப்பில் இருந்து வெளி வந்துள்ளது.
அத்துடன், அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஒரு பின்னணியில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில், நடக்கப்போவது என்ன என்ற வினா எழும்புகின்றது.
அரசாங்கம் தான் அதிகாரப் பரவலாக்கலை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கண்ணாமூச்சி நாடகத்தை அரங்கேற்றுகின்ற தென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமா கண்ணாமூச்சி விளையாட வேண்டும் என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கூட்டமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சுரேஷ் எம்.பி., பேச்சுவார்த்தையின் நம்பகத்தன்மை பற்றி நிறையவே பேசியுள்ளார்.
எனவே, கூட்டமைப்பு தொடர்ந்தும் கண்ணா மூச்சி விளையாடாது, தான் தயாரித்து வைத்துள்ளதாகக் கூறுகின்ற தீர்வுப் பொதியை முன் வைத்துப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதே சிறந்தது.
இல்லையேல், கடந்த காலங்களில் போன்று அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் குரங்கும் அப்பத் துண்டும் கதை ஒட்டு மொத்த தமிழ்த் தலைமைகளும் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டி வரும்.
வி.தேவராஜ்



0 Responses to மீண்டும் அரங்கேறும் குரங்கும் அப்பத்துண்டு கதை