Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல முனைகளில் காணப்படுகின்றன. பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் அரசாங்கம் சிக்கியுள்ளது. உள்நாட்டில் தொழிலாளர்கள் போராட்டம் ஒரு பக்கம். தமிழ் மக்களுக்குக் அதிகாரத்தை வழங்கு என வெளிநாடுகள் மறுபக்கத்தில் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

எனவே இந்த இரண்டு விதமான அழுத்தங்களும் போரின் விளைவால் ஏற்பட்டவை என்றே நான் கருதுகிறேன்.

போரே இவற்றை உருவாக்கியது. நடைபெற்ற போர் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலக அதிகார மையங்களின் நலன்களிற்காகவே நடத்தப்பட்டது.

இன்று அதே சக்திகள் உள்ளுர் கிளர்ச்சிகளை அதே போன்று நசுக்குமாறு அறிவுரை வழங்கி வருகின்றன.

யுத்த காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். தமிழ் மக்கள் 150,000 பேர் கொல்லப்பட்டனர். 30,000 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 55,000 படைச் சிப்பாய்கள் ஊனமாக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்திற்கு மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கு பகுதி முற்றாக அழிக்கப்பட்டது. நாகரீக வளர்ச்சி யாவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

இவை யாவற்றையும் உருவாக்கிய பின்னர் நாம் என்னத்தைப் பெற்றுள்ளோம். முழுமையான அடிமை நிலைக்கு சென்றுள்ளோம். இன்று அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு பூரண சரணாகதி நிலைக்கு உள்ளாகியுள்ளது.

மறுபக்கத்தில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் 13 + நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அழுத்தத்தின் மேல் அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. ஜனாதிபதி 13+ போவார். ஆனால் அவரின் ஆட்சிக்கு எதிராக அவரது தளத்திற்கு உள்ளேயே சதிகள் உருவாகும். பேரினவாத சக்திகள் அதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கியும் விட்டனர்.

இந்த சதி ஆலோசனைகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. வெளிநாடுகளிலும் நடைபெறுகின்றன.

மேலும் சஜித் பிரேமதாஸா முன்னைநாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தொடர்புகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் சர்வதேச கனவான்களின் உதவியுடன் அதிகார பகிர்வு இல்லாத நிலைமையின் ஊடாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயல்கின்றனர்.

இவற்றை எல்லாம் சமாளிக்கும் முகமாக நாட்டை இராணுவ மயமாக்கும் திட்டத்துடன் ஜனாதிபதி தனது அரசியல் பயணத்தை மேலும் தொடர எண்ணியிருந்தார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி என்று கூறி மாணவர்களை படைமுகாமுக்கு பயிற்சிக்காக செல்லுமாறு பணித்தார்.

இது பாரிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது. எனவே ஜனாதிபதி முதல் முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இன்று இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்களும் தொழிலாளர்களும் நாடு முழுவதும் கிளர்ந்து வருகின்றனர்.

தனியார் துறைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என்ற அரசின் திட்டத்தினால் நாட்டில் இரத்தக்களரியே ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் தொழிலாளர்களின் நன்மைக்காகவே இந்த திட்டத்தை முன்வைப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை துப்பாக்கி வேட்டுகளை தடியடிகளை மேற்கொண்டா இந்த நல்ல காரியத்தை அமுல்படுத்த வேண்டும்.

உண்மையில் இவ்வளவு அடக்குமுறைகள் ஊடாக கொண்டு வரப்படும் திட்டம் எப்படி நன்மையானதாக அமைய முடியும். கட்டுநாயக்கா ஆடைத் தொழிற்சாலை சுற்றாடல் இன்று அரச வன்முறைகளின் மையமாக மாறியுள்ளது.

துரதிர்ஷ்ட வசமாக மலையக தொழிலாளர்கள் அமைதியான முறையில் உள்ளனர் இது ஏன் என்று எனக்கு புரியவில்லை. மலையக தலைமைகள் யாவும் பூரண சரணாகதி நிலையில் இன்று இருப்பதால் தொழிலாளர் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் கட்டுநாயக்க தொழிலாளர் போன்று மலையக தொழிலாளர்களும் கிளர்ந்தால் இந்த ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

கட்டுநாயக்காக பகுதியில் 30,000 தொழிலாளர்கள் வீதிக்கு வந்ததால் இந்த அரசாங்கத்தின் முதுகெலும்பே முறிந்த நிலை காணப்படுகின்றது.

எனவே ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மலையகத் தொழிலாளர்கள் களத்தில் குதித்தால் என்ன நடக்கும்? இந்த நாட்டில் அதிக கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்கள் மலையகத் தொழிலாளர்களே.

கட்டுநாயக்க ஆடை தொழிலாளர்களுடன் அமைச்சர் பிரதானிகள் சந்திக்க போனபோதே போராட்டம் வெடித்துள்ளது. தனியார் துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் மூலம் நன்மையுண்டென விளக்குவதற்காகச் சென்ற அமைச்சர்களே கலவரத்திற்கு காரணமாகி உள்ளனர். இவர்களின் விளக்க உரைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் இன்று நடைபெறும் மாற்றங்களைக் கண்டு நம்பிக்கை கொள்ள வேண்டும். தோல்வி விரக்தி நிலைமைகளிலிருந்து மீள வேண்டும். தென் இலங்கையில் வேகமாக நடைபெறும் கள நிலை மாற்றங்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.

“வெற்றி நாயகர்கள்' என்ற புகழ் யாவும் புஸ்வாணமாகிவிட்டது. துன்பம் என்பது தமிழ் மக்களுக்கு நிரந்தரம் என்ற நிலை தகர்கின்றது. தமிழ் மக்கள் பலவீன நிலையில் உள்ளனர். ஆகையால் எத்தகைய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம் என மழைக்கு முளைத்த காளான்களைப் போல திடீரெனத் தோன்றும் பண்டிதர்களின் கருத்துகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

எனவே காலத்தை வீண் அடிக்காமல் உங்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தயாராகுங்கள். இந்த அரசாங்கம் செய்த பாவத்திற்கு நரகலோகத்திற்குப் போவதை விட வேறு மார்க்கம் இல்லை.

நான் மத ரீதியான கருத்தியலில் நம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக இதைக் கூறுகிறேன்.

இவர்கள் செய்த பாவத்தைப் போக்க யாராலும் முடியாது. ஆனால் முயற்சி செய்து அதில் இருந்து விடுபட முடியும்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்.

இது அரசு தரப்புக்கு சிறப்பாக பொருந்தும்.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு அவருக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் இன்றும் கூட தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்கி செய்த பாவத்தை கழுவிக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது.

0 Responses to ஈழத் தமிழ் மக்களுக்கு செய்த பாவத்தை கழுவுமா அரசு? விக்ரமபாகு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com