தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்காகட்டும், மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட இந்த அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று உருவாக்கியுள்ளது.
“தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில் அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண கர்த்தாக்களாக உள்ளனர்.
மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய் உள்ளனர்.
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர்.
தமிழ் மக்களின் மௌனம், இயலாத்தன்மையும் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ள நிலைமையையும் மக்களைப் பேசா மடந்தையாக்கியுள்ளது.
மனிதாபிமான படை நடவடிக்கையின் மூலம் மக்களை மீட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம் மக்களுக்கு துணையாக இல்லை.
மனிதாபிமான படை நடவடிக்கைக்குத் துணை போனவர்களும், மக்களுக்கு விடிவையோ, விமோசனத்தையோ பெற்றுத்தரும் நிலையில் இல்லை.
எதற்கு ஆதரவளிப்பது என்ற விவஸ்த்தையே இல்லாது அரசாங்கம் கூறுகின்ற அனைவற்றிற்கும் ஆமாம் போடுவதிலும், அரசாங்கம் செய்வது அனைத்தும் நன்மைக்கே என அறிக்கையிடுவதிலும் இவர்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்காக நீதி கோரி நிற்கும் தருஸ்மன் அறிக்கையைக் கூட இவர்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக விட்டு வைக்கவில்லை.
இவ்வாறானவர்களின் கைகளிலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கின்றது.
அண்மையில் வடக்குக்குச் சென்றிருந்த புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் ஒருவரின் ஆதங்கத்தில் இதுவும் ஒன்று.
உள்ளக சுயநல அரசியலால் சீரழிந்து கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கின் நிலைமை ஜீரணிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டதுடன், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வடக்கில் முதலிடுவதற்குக் கூட தயங்குவதிலும் நியாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
உள்ளக அரசியல், அதிகார உயர் பீடத்தினரின் போக்குக் காரணமாக புலம் பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புலம் பெயர் வாழ் தமிழர்களில் பலரைச் சந்தித்த போது, இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் அவர்கள் முதலிடுவதாயின், அதன் பெரும் பகுதியை அரசியல் மேல்மட்ட தலைகளுக்குத் தீனியாக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.
உண்மையில், புலம்பெயர் தமிழர்களை சுதந்திரமாக முதலீடு செய்வதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குமாக இருந்தால் வடக்கு, கிழக்கு நோக்கிப் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் எவ்விதத் தடைகளுமின்றி வந்து சேரும்.
அது மாத்திரமல்ல, உயிரிழந்து கிடக்கின்ற தத்தமது ஊர்களையும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தத்தெடுத்து உயிர்கொடுத்து முன்னேற்ற முன்வருவர்.
வடக்கு, கிழக்கின் நிலைமை இதுவென்றால் மலையகம் சுயநல அரசியலுக்குள் புதைந்து போய் முடக்கப்பட்டு முடங்கிக் கிடக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வையே முறையாகப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள மலையக அரசியல் தலைமைகள், மக்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்கும் என்பது கேள்விக் குறியே.
இது இவ்வாறிருக்க அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்திருந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து எதிர்ப்பலைகள் எழும்பின. இறுதியில் சுதந்திர வர்த்தக வலயத்தில் எழுந்த எழுச்சி, அதன் விளைவால் எழுந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிழந்துள்ளார்.
ரொஷான் சானகவின் உயிர்த்தியாகம் ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் வாங்க வைக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
உண்மையில் இந்த ஓய்வூதியத் திட்டத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளவர்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர். ஆனால், மலையகத் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இது பற்றி பெரிதாக வாய் திறக்கவில்லை.
ஏனெனில், பெரும்பாலானவர்கள் அரசாங்கத் தரப்புடன் அணிவகுத்திருப்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. வடக்கின் நிலைமைதான் இங்கும் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருக்கும் வரை, மலையக அரசியலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. ஆனால், இன்று அந்த நம்பிக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரியவில்லை.
சுயநல அரசியல் கோலோச்சும் மலையகத்தில் மக்களைப் பற்றி கவனிப்பதற்கு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
மொத்தத்தில் வடக்கு, கிழக்காக இருக்கட்டும் அல்லது மலையகமாக இருக்கட்டும், ஒட்டு மொத்தத் தமிழினம் மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
வி.தேவராஜ்
மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது தமிழினம்: வி.தேவராஜ்
பதிந்தவர்:
Anonymous
05 June 2011



0 Responses to மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்றது தமிழினம்: வி.தேவராஜ்