Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைவாழ் தமிழர்களுக்கு உரிய அரசியல், சமுதாய அங்கீகாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் அரசியலிலும், தொழில், வேலை வாய்ப்புகளில் சமுதாயத்திலும் சமவாழ்வுரிமைப் பெறும் வகையில் அங்கு அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கிட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ராஜபட்சவை இந்தியப் பிரதமர்மன்மோகன்சிங், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோர் பல்வேறு வாய்ப்புகளில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

அவர்களது வலியுறுத்தலை ஏற்பதாகவும், தமிழர்களுக்கு உரிய அரசியல் அந்தஸ்து அளிக்கப்படும் என்றும் ராஜபட்ச அப்போது உறுதியளித்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் தலைவர்கள் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பலசுற்று கருத்தாய்வு செய்த இலங்கை அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை உலகளாவிய தமிழர்கள் மத்தியில் இருந்தது.

அதைப் பொய்யாக்கும் வகையில் இலங்கையில் அதிகாரப் பரவல் என்ற அரசியல் மாற்றத்திற்கு இடமில்லை என்ற கருத்தை நேற்று இலங்கை அரசு வட்டாரம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உலகளாவிய தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்கள் உள்ளத்தில் மிகப்பெரும் வேதனை தீயை மூட்டும் நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் மத்திய அரசு சிறிதும் தாமதிக்காமல் நேரில் தலையிட்டு இலங்கைவாழ் தமிழர்களுக்கு உரிய அரசியல், சமுதாய அங்கீகாரத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தங்கபாலு தனது அறிக்கையில் குறி்ப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to ஈழத் தமிழர்களுக்கு சம வாழ்வுரிமை பெற்றுத்தர வேண்டும்: பிரதமருக்கு தங்கபாலு வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com