தாயகத்தில் இருந்து வரும் செய்திகள் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய கவலைகளை அதிகரிக்கின்றன. அங்கிருந்து வரும் தகவல்களின்படி கெடுபிடி யுகத்தின் அத்தாட்சியான குடும்ப விவரம் குடும்ப உறுப்பினர்கள் படங்கள் அடங்கிய பட்டியலை வீட்டுக்வெளியே தொங்க விடும் காலம் மீண்டும் வருகிறது.
வீட்டுக்கு வெளியே தொங்கவிடும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அட்டைகள் ஒரு அநாகரிகமான கட்டாயம். இதை அடிமைச் சின்னம் என்று கூடச் சொல்ல முடியும். ஆட்சியாளர்கள் தவிர்ந்த பிறிதொருவரும் இதை அங்கீகரிக்கவில்லை.
இயல்பு நிலை தோன்றிவிட்டது. என்று பறை சாற்றும் இலங்கை அரசு ஏன் இந்த அட்டையை தொங்கவிடும் முறையை மீண்டும் கொண்டுவருகிறதோ தெரியவில்லை. ஊரைவிட்டு வெளியே செல்வோர் உள்ளுக்கு வருவோரைக் கண்காணிப்பதற்கு இந்த நடைமுறை கொண்டு வரப்படுவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வரும் போது படையினரின் விசாரணைக்கு உட்படுகின்றனர். கால்நடை, மிதி வண்டி, மோட்டார் சைக்கிள், ஜீப் என்று பலவிதமாக நெடுஞ்சாலை தொடக்கம் சிறு கையொழுங்கை வரை படையினர் நடமாடுகின்றனர்.
கால் நடையாகச் செல்லும் படையினர் மர நிழல்களின் கீழ் நின்று பாதசாரிகளை நிறுத்தி விசாரிக்கின்றனர். வீட்டு வேலிகளுக்கு மேலால் எட்டிப் பார்த்தபடி நிற்கும் படையினரால் மக்கள் வாழ்வின் நிம்மதி சீர்குலைகிறது. கிணற்றடியில் நிற்கும் பெண்களின் வேதனை மிகப் பெரியது.
கால் நடையாகக் கிராமப் புற ஒழுங்கைகள், தெருக்களில் செல்லும் படையினரைக் கண்டதும் ஊர் நாய்கள் பெருங் குரலில் குலைக்கின்றன. இந்திய இராணுவம் நடமாடிய காலத்தில் எங்கள் நாய்கள் இப்படித்தான் ஆட்சேபம் தெரிவித்தன என்று ஒரு முதியவர் சொன்னார்.
வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
01 June 2011



0 Responses to வீட்டில் இருப்போரின் படமும் குடும்ப விபரமும் வெளியே தொங்கவேண்டும்