Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,

அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து நாளை( 6.9.2011 -செவ்வாய் கிழமை) காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும்.

நாம் தமிழர் கட்சியினர் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டு மேற்கொள்ளும் இந்தப் பரப்புரை பயணம், சத்துவாச்சேரி, ரத்னகிரி, கீழ்விசாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, அம்மூர், வாலாஜா, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பனப்பாக்கம், தாமல், காஞ்சீபுரம், ஆசூர், ஐயம்பேட்டை, அவலூர், ஏகினாம்பேட்டை, வாலாஜா பாத், படப்பை, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, போரூர் வழியாக வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகர் வந்து சேரும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை எப்படி அநீதியானது என்பதையும், ராஜீ்வ் கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார் என்கிற உண்மைகளையும், மூன்று பேரின் மரண தண்டனையை குறைப்பதற்கான நியாயங்களையும் இந்த பரப்புரை பயணத்தில் சீமானும், அவரோடு பயணிக்கும் கட்சியின் முன்னணி செயல் வீரர்களும் எடுத்துரைப்பார்கள்.

3 பேரின் மரண தண்டனயை ஒழிக்கக் கோருவது ஏன் என்பதை விளக்கி வழியே சந்திக்கும் மக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்படும்.

பரப்புரைப் பயணம் முடிவில் எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில், மூன்று பேரின் உயிர் காக்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். நான் நியாயவுரையாற்றுகிறேன்.

நியாயம் கோரி நடைபெறும் இந்த நெடும் பயணத்தில் தமிழின மக்கள் பெரும் திரளாகக் கூடி ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to செந்தமிழன் சீமான் 5 நாள் பரப்புரை நடைபயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com