சட்டப்பேரவையில் தனது சொத்து விவரம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. அப்போது, வேட்பு மனு தாக்கலின் போதே சொத்து விபரம் பற்றி தெரிவித்திருந்தேன். இதில் ரகசியம் எதுவும் இல்லை. இந்த மூன்று மாதமாக சொத்து எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமது சொத்து மதிப்பு சுமார் 51 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசியதாவது:
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு நாளிதழில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது சொத்து கணக்கை வெளியிடவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. எனவே சொத்து கணக்கை முதல் அமைச்சர் தெரிவிப்பாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.
இதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா: உறுப்பினர் குறிப்பிட்ட பத்திரிகை பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் எந்த ரகசியமும் இல்லை. இந்திய தேர்தல் ஆணைய விதி முறைப்படி சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து கணக்கை வெளியிட வேண்டும். அதன்படி நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது, 5 மாதங்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் மாதம் எனது சொத்து கணக்கை வெளியிட்டேன். அப்போது அனைத்து பத்திரிகைகளிலும் அந்த விவரம் பெரிதாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் நான் போட்டியிட்ட போது கொடுத்த விவரத்தின்படி எனது அசையும் சொத்து 13 கோடியே 3 லட்சத்து 77 ஆயிரத்து 929. அசையா சொத்து ரூ.38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம். எனது மொத்த சொத்தின் மதிப்பு ரூ.51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 929.
தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. அதன் பிறகு நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
எனது சொத்து ரூ.51 கோடி: கடந்த 3 மாதமாக சொத்து எதுவும் வாங்கவில்லை: முதல்வர்
பதிந்தவர்:
Anonymous
05 September 2011



0 Responses to எனது சொத்து ரூ.51 கோடி: கடந்த 3 மாதமாக சொத்து எதுவும் வாங்கவில்லை: முதல்வர்