போர்க்குற்ற விவகாரம் இலங்கை அரசாங்கத்தை எங்கேயும் விடாமல் எல்லா இடங்களிலும் துரத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றிருந்த நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றிருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கால்லகே'க்கு எதிராகவும் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் இருந்த நிலையில், மேஜர் ஜெனரல் சாஜி கால்லகே'க்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கிடையில் பிரித்தானியப் பயணத்தை இடைநிறுத்தி விட்டு அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றங்கள் துரத்தத் தொடங்கியது அதுவே முதல்முறை.
இதன் பின்னர், உலகில் பல்வேறு நாடுகளிலும் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவன் ஒருவரின் தந்தை மற்றும் தமது உறவினர்களை இழந்த இருவர் என மூவர், ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நட்டஈடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட ஆலோசனையின் பின்னரே அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
முன்னதாக அவர் அமெரிக்காவில் உள்ள தமது உறவினர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் வழக்குகளால் நெருக்கடி ஏற்படலாம் என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனால் நியூயோர்க்குடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பயணம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
நியூயோர்க் மாநிலத்தில் மட்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு வெளியே சென்றால் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் அமெரிக்க அதிகாகளால் எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் தான் நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை புலிகளின் தளபதி கேணல் ரமேஷின் மனைவி தாக்கல் செய்துள்ளார்.
கேணல் ரமேஷ் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த அவரும் ஏனைய தலைவர்களும் பின்னர் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.
இவர்கள் மோதலில் கொல்லப்பட்டதாகவே அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் மனித உரிமை அமைப்புகளோ சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றன.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையாக உள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட வீடியோ காட்சி ஒன்றில் கேணல் ரமேஷை, படையினர் கைது செய்து விசாரணை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.
அவர் உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர், படுகொலை செய்யப்பட்டதான சந்தேகத்தை இது வலுப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை சாட்சியமாக முன்வைத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார், கேணல் ரமேஷின் மனைவி.
ஆயுதப்படைகளின் தளபதி என்ற வகையில் கேணல் ரமேஷ் மற்றும் பொதுமக்களின் படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என்கிறது அவரது மனு.
இந்த வழக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்றாலும் ஐ.நா பொதுச்சபையில் அவர் உரையாற்றுவதற்கு முதல் நாள் இந்த வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நேரடியாகப் போர்க்குற்றம் சுமத்தும் முதலாவது வழக்கு இதுவாகும்.
இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
ஆனால் இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் உடனடி வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் இதுபோன்ற வழக்குகள் இராஜதந்திர ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாரிய நெருக்கடியைக் கொடுக்கக் கூடியவை.
அதேவேளை, மற்றொரு போர்க்குற்ற வழக்கை இலங்கை சுவிற்சர்லாந்திலும் எதிர்கொண்டுள்ளது.
சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான பிரதித் தூதுவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிரான வழக்கு சுவிற்சர்லாந்து சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போரின் போது 57 ஆவது டிவிஷனின் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த 2009 செப்ரெம்பர் 18ஆம் திகதி பேர்லினுக்கான பிரதித் தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டார்.
போரின் போது பொதுமக்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்ற வகையில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மீது போர்க்குற்ற வழக்குப் பதிவாகியுள்ளது.
ஜேர்மனிக்கான தூதுவர் மடுவெகெதர'வின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இவரைப் பதில் தூதுவராக பணியாற்றிய சுவிற்சர்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது.
இதனால் கோங்காஹகே'யை அவசரமாக ஜேர்மனிக்கு அனுப்பி வைத்துள்ளது அரசாங்கம்.
அதேவேளை இரண்டாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸும் நாடு திரும்பியுள்ளார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே வெளிநாட்டு இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டதாகவும், அந்தக் காலஎல்லை முடிந்து விட்ட நிலையில் அவர் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
செப்ரெம்பர் 18 ஆம் திகதியுடன் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்து விட்டது என்பது உண்மையாக இருந்தாலும், அவருக்கு ஜனாதிபதி மேலும் ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு இருந்தது.
சுவிற்சர்லாந்து அவரை ஏற்கத் தயாராக இல்லாத காரணத்தினாலேயே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தமது நாட்டு எல்லைக்குள் பிரவேசித்தால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர்.
எல்லாப் பக்கங்களிலுமே அரசாங்கத்தை போர்க்குற்ற விவகாரம் துரத்தத் தொடங்கியுள்ளது.
இந்த துரத்தல் இலங்கையை தனிமைப்படுத்தும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து ஜனாதிபதி அங்கு செல்லவில்லை.
இப்போது அமெரிக்காவில் போடப்பட்டுள்ள வழக்கை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரியவில்லை.
ஏற்கனவே போர் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட சிலருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது.
இனிமேல் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைய முடியாத நிலை தோன்றியுள்ளது.
அதுபோல மேஜர் ஜெனரல் சாஜி கால்லகே பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் அங்கு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்.
ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக செயற்படும் பாலித கொஹன்னவுக்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போர்க்குற்ற வழக்கு இருக்கிறது.
இப்படியே பல்வேறு வழிகளிலும், போர்க்குற்ற விவகாரம் இலங்கையை நெருக்கத் தொடங்கியுள்ளது.
இலங்கை அரசு நம்பகமான விசாரணை நடத்தினாலோ அல்லது சர்வதேச விசாரணைக்கு அனுமதி அளித்தாலோ கூட இப்போதுள்ள வழக்குகளில் இருந்து விடுபட முடியாது.
சுபத்ரா
எல்லாப் பக்கங்களில் இருந்தும் அரசைத் துரத்தும் போர்க்குற்றங்கள்
பதிந்தவர்:
தம்பியன்
25 September 2011



0 Responses to எல்லாப் பக்கங்களில் இருந்தும் அரசைத் துரத்தும் போர்க்குற்றங்கள்