குஜராத்தில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.
இந்த ஆதரவு நல்லெண்ண அடிப்படையில் அளிக்கப்பட்டது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்தும், அதற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது பற்றியும் உங்கள் கருத்தென்ன?
மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தியே உண்ணாவிரதம் இருப்பதாக குஜராத் முதல்வர் மோடி அறிவித்துள்ளார். எதை வலியுறுத்தி அவர் உண்ணாவிரதம் இருக்கிறாரோ அதே கொள்கைகளைத் தான் அதிமுகவும் வலியுறுத்துகிறது. இந்தச் சூழலில், என்னிடம் தொலைபேசி மூலம் பேசிய நரேந்திர மோடி, தமது உண்ணாவிரதத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையிலேயே அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் தம்பிதுரையையும், மைத்ரேயனையும் குஜராத் அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.
இந்த உண்ணாவிரதம் மூலம் அரசியல் அரங்கில் மாற்றங்கள் ஏற்படுமா?
நல்லெண்ண அடிப்படையிலேயே அவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அதில் பிழை எதையும் காண இயலாது. மதங்களுக்கு இடையே அமைதியையும், நல்லிணக்கணத்தையும், காப்பதற்காகவே இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக மோடி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா?
இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. அதுபோன்ற ஒரு சூழல் எழும்போது நான் பதிலளிப்பேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.



0 Responses to நல்லெண்ண அடிப்படையில் ஆதரவு: ஜெயலலிதா